தங்கப் புதையல் ஆசையால் 50 அடி குழி தோண்டிய குடும்பம் - மூச்சுத்திணறி இருவர் உயிரிழப்பு
வீட்டில் புதையல் இருப்பதாக மாந்திரீகர்கள் தெரிவித்ததன் பேரில், 50அடிக்கு குழிதோண்டிய இருவர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள திருவள்ளூர் காலனியைச் சேர்ந்த முத்தையா என்பவரது வீட்டில் கடந்த ஆறு மாதங்களாக 50அடிக்கு மேலாக குழிதோண்டி வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த மழையின் காரணமாக, குழியில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் சில நாட்கள் குழி தோண்டும் பணி நிறுத்தப்பட்ட நிலையில், அதன் பின்னர் தேங்கிய தண்ணீரை மோட்டார் மூலமாக அகற்றி, மீண்டும் குழிதோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, திடீரென மூச்சுத்திணறி, குழிதோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த ரகுபதி, நிர்மல் கணபதி மற்றும் முத்தையாவின் இரு மகன்கள் உள்ளிட்ட நான்கு பேர் மயங்கி விழந்துள்ளனர். அதனைத்தொடர்ந்து அவர்கள் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ரகுபதியும், நிர்மல் கணபதியும் உயிரிழந்தனர். முத்தையாவின் இரு மகன்கள் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதனைத்தொடர்ந்து நடைபெற்ற காவல்துறை விசாரணையில் முத்தையாவின் வீட்டில் தங்கப் புதையல் இருப்பதாக கேரளாவைச் சேர்ந்த மாந்திரீகர்கள் தெரிவித்ததும் அதனடிப்படையில் கடந்த ஆறு மாதங்களாக முத்தையா குடும்பத்தினர் புதையலைத் தேடி குழிதோண்டியதும் தெரியவந்தது.