சிறுவாபுரி முருகன் கோயிலில் போலி விஐபி டிக்கெட்: சோதனையில் கண்டுபிடிப்பு
சிறுவாபுரி முருகன் கோயிலில் போலி விஐபி டிக்கெட் அச்சடித்து, விற்பனை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் உள்ள பாலசுப்பிரமணி கோயில், புகழ் பெற்ற முருகன் கோயில்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்தக் கோயிலின் சிலை பச்சை மரகதத்தாலானது. வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில், பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு சாமி தரிசனம் செய்ய வருகை தருவர். கூட்டத்தை தவிர்த்து சாமி சரிதனம் செய்ய நினைப்பவர்களுக்கு, ரூ.50, ரூ.100 விலையில் விஐபி டிக்கெட் வழங்கப்படுகிறது. இந்நிலையில் இன்று விஐபி தரிசனத்திற்கான நுழைவு வாயிலில் கோயில் அதிகாரிகள் பக்தர்களை அனுப்பிக்கொண்டிருந்த போது, டிக்கெட்டை பரிசோதித்தனர்.
அப்போது போலி டிக்கெட்டை யாரோ கொடுத்துச்சென்றது தெரியவந்துள்ளது. போலியான டிக்கெட்டை கொடுத்த பக்தர் யார் என தேடிய போது, கூட்டத்தில் அவர் கிடைக்கவில்லை. இதனையடுத்து டிக்கெட்டை பரிசோசித்த கோயில் செயல் அலுவலர் நாராயணன், போலியாக டிக்கெட்டை அச்சடித்து விநியோகம் செய்தவர் யார்? என விசாரணை நடத்தி வருகிறார். இதற்கு முன்பு இதே போல முறைகேடுகள் நடந்துள்ளதா எனவும், கோயில் நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் இதில் சம்மந்தப்பட்டுள்ளனரா எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.