சமூக வலைதளங்களில் பரவுவது சாத்தான்குளம் வீடியோவா?: போலீசார் விளக்கம்!
சமூக வலைதளங்களில் பரவுவது சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான வீடியோ அல்ல என சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது
சாத்தான்குளத்தில் விசாரணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருவதோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் உதவி ஆய்வாளர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ சாத்தான்குளம் வீடியோ என்று பரவியது. ஒருவரை கட்டி வைத்து அடிப்பதுபோல் அந்த வீடியோ காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இந்த வீடியோ குறித்து சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது
அதன்படி, சமூக வலைதளங்களில் பரவுவது சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான வீடியோ அல்ல. 2019ல் மகாராஷ்ட்ராவில் நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோவை தொடர்புப்படுத்தி தவறான தகவல் பரவுகிறது. தந்தை,மகன் உயிரிழந்த விவகாரத்தோடு தொடர்புப்படுத்தி வேறு வீடியோக்களை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.