மருந்துக் கடையில் பணம் கேட்டு மிரட்டிய போலி இன்ஸ்பெக்டர்
சென்னையில் மருந்துக் கடையில் புகுந்த போலி ஆய்வாளர் கடையின் உரிமத்தை ரத்து செய்து விடுவதாக மிரட்டி பணம் கேட்டுள்ளார்.
சென்னை ஆதம்பாக்கம் கருணீகர் தெருவில் கடந்த 15 வருடங்களாக செயல்பட்டு வருகிறது முத்து மருந்துக் கடை. இதன் உரிமையாளர் ஜெயப்பால் (35). இவர் கடையில் இல்லாத நேரம் பார்த்து, மதியம் 1 மணியளவில் மாருதி காரில் ஒருவர் வந்ததுள்ளார். தான் மருந்தக ஆய்வாளர் (டிரக் இன்ஸ்பெக்டர்) எனக் கூறி அடையாள அட்டையை காண்பித்துள்ளார். கடையில் அதிகப்படியான மாத்திரைகள் விற்கப்படுவதாகவும் அதற்கு முறையான பிரிஸ்கிரிப்சன் இல்லாமல் வழங்கபடுவதாக புகார் வந்திருப்பதாக கூறியுள்ளார். உங்களது கடையின் உரிமத்தை ரத்து செய்து விடுவதாக மிரட்டி, கடையில் வாடிக்கையாளர்கள் முன்னே சத்தம் போட்டுள்ளார். கடையில் ஊழியர்கள் மட்டுமே இருந்துள்ளனர். மேலும் 25,000 ரூபாய் பணமும் கேட்டுள்ளார். கடையில் இருந்த ஊழியர்கள் இவர் ஆங்கிலமும், இந்தியும் பேசியதால் கடையின் உரிமையாளருக்கு செல்போனில் அழைத்து தகவலை சொல்லியுள்ளனர்.
கடையின் உரிமையாளரும் செல்போனில் பேசி, தான் ஒரு 5 நிமிடத்தில் வந்துவிடுவதாக கூறியுள்ளார். ஆனால் அதற்குள் கடைக்கு வந்த 5 நிமிடத்தில் அங்கிருந்து சென்று விட்டார். செல்லும் முன் அவரது தொலைபேசி எண்ணை கொடுத்துவிட்டு 30 நிமிடத்தில் 25000 ரூபாய் பணம் நான் சொல்லும் இடத்தில் கொண்டுவந்து தரும்படியும் இல்லையென்றால் கடையின் உரிமத்தை ரத்து செய்து விடுவதாகவும் மிரட்டி விட்டு காரில் புறப்பட்டு சென்றார். கடையின் உரிமையாளர் கடைக்கு வந்துவிட்டு டிரக் ஆய்வாளரின் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது 30 நிமிடத்தில் 25000 பணத்தை கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார். சுதாரித்து கொண்ட உரிமையாளர் போலீசில் புகார் செய்வேன் என்று கூறியுள்ளார். அத்துடன் செல்போனை அணைத்து வைத்து விட்டார்.
இதனையடுத்து டிரக் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து கேட்ட போது அப்படி யாரும் இங்கிருந்து ஆய்வு செய்ய வரவிலை என கூறியுள்ளார்.இதன் பிறகு தான், வந்தது போலி டிரக் ஆய்வாளர் என்பது தெரியவந்தது.ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் இருந்து 500 மீட்டர் இருக்கும் கடையில் பட்டப்பகலில் டிரக் போலிஸ் என கூறி மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் கடைக்கு வந்து அடையாள அட்டையை காண்பித்து மிரட்டும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.