இறந்தவர் பெயரில் சான்றிதழ்: போலி ஹோமியோபதி மருத்துவர் கைது
இறந்தவர் பெயரில் போலி ஹோமியோபதி மருத்துவ படிப்பு சான்றிதழ் பெற்ற போலி மருத்துவரை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலிசார் கைது செய்துள்ளனர்.
ஹோமியோபதி மருத்துவ கவுன்சிலின் பதிவாளர் ராஜசேகர், போலி சான்றிதழ் மோசடி குறித்து நடவடிக்கை கோரி, கடந்த ஆண்டு சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் காவல் ஆணையருக்கு புகார் கடிதம் எழுதியிருந்தார். இதன்பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து, தமிழ்நாடு ஹோமியோபதி கவுன்சில் மூலம் இறந்தவர் பெயரில் போலி மருத்துவ படிப்பு சான்றிதழ் வழங்கப்பட்டதாக கவுன்சிலின் தலைவர் ஹனிமன், பதிவாளர் சவுந்தர்ராஜன் உள்ளிட்ட 15 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த விசாரணையில் 2010-லிருந்து 2012 வரை 40 பேருக்கு போலி மருத்துவ சான்றிதழ் வழங்கப்பட்டது தெரியவந்தது. இதில் 10 பேர் தானாக முன் வந்து போலி சான்றிதழை ஒப்படைத்த நிலையில் மீதமுள்ளவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.