சுகாதாரத்துறை அதிகாரிக்கே மருத்துவம் பார்த்த போலி மருத்துவர்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆய்வுக் வந்த சுகாதாரத்துறை பெண் அதிகாரிக்கே மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துவரங்குறிச்சி பகுதியில் மருத்துவம், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது காவல்நிலையம் அருகேயுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்குச் சென்று ஆய்வு நடத்தினர். வந்திருப்பது சுகாதாரத்துறை அதிகாரிகள் என்று தெரியாமல், போலி மருத்துவர் சின்னதம்பியும், செவிலியர்களும், சுகாதாரத்துறை பெண் அதிகாரிக்கும் பிற அதிகாரிகளுக்கும் மருத்துவம் பார்த்தனர். இதையடுத்து போலி மருத்துவரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், ஆவணங்களை சோதனையிட்டபோது பி.ஏ மட்டும் படித்து போலியாக மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. இதனையடுத்து போலி மருத்துவர் சின்னத்தம்பி, 4 செவிலியர்கள் ஆகியோரை கைது செய்தனர். மேலும் மருந்துகள், மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்து மருத்துவமனைக்கு சீல் வைத்தனர். தடை செய்யப்பட்ட மருந்துகள், கருக்கலைப்பு மாத்திரைகள், காலாவதியான மருந்துகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.