10ம் வகுப்பு படித்து மருத்துவம் பார்த்த பெண் உட்பட 2 பேர் கைது
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பள்ளிப்படிப்பு படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆரணியை அடுத்த சந்தைமேடு கருங்காலிகுப்பத்தில் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த ராஜாமணி என்ற பெண்மணி கடந்த 5 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்திருக்கிறார். இதேபோல, அக்கால பியுசி படித்த சுப்பிரமணியன் என்ற முதியவர் கடந்த பத்தாண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்திருக்கிறார். இருவரையும் கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களில் 44 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதே போல், திருச்சி மாவட்டம் முசிறி அருகே மருத்துவம் படிக்காமல் கடந்த 4 ஆண்டுகளாக சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவர் தலைமறைவாகி இருக்கிறார். அயித்தாம்பட்டி கிராமத்தை புஷ்பராஜ் என்ற அவர் மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளிப்பதாக புகார் வந்தது. இதையடுத்து திருச்சி மாவட்ட மருத்துவ மற்றும் நலப்பணிகள் சார்பில் புஷ்பராஜின் வீட்டில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது அவர் போலி சான்றிதழ்களை வைத்து கிராம மக்களுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது. அவரது வீட்டின் மேல் தளத்தில் 4 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை நடத்தியோடு, ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருந்துப் பொருட்களை வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மருத்துவக்குழுவினர் அளித்த புகாரின் பேரில், முசிறி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான போலி மருத்துவரை தேடி வருகிறார்கள்.