பேஸ்புக் நட்பு: மாணவிக்கு ஆபாச மிரட்டல்: நண்பர்கள் கைது!
பேஸ்புக்கில் அறிமுகமான பெண்ணிடம், அவரது ஆபாசப் படங்கள் தங்களிடம் இருப்பதாகக் கூறி மிரட்டி பணம் பறித்த 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மேற்கு சைதாப்பேட்டையை சேர்ந்த பொறியியல் மாணவி அழகி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 21. இவருக்கு கடலூரைச் சேர்ந்த அமலேஷ் என்பவர் பேஸ்புக்கில் அறிமுகமானார். தினமும் சாட்டிங் செய்துகொண்டிருந்தனர். அவர் அமலேஷுக்கு தனது புகைப்படங்களை அனுப்பியுள்ளார். அந்தப் புகைப்படங்களை ஆபாச படத்துடன் கிராபிக்சில் மாற்றியுள்ளா அமலேஷ்.
பின்னர் அழகியைத் தொடர்பு கொண்ட அமலேஷ், அவரது அந்தரங்க ஆபாசப் படம் தன்னிடம் இருப்பதாகவும், அதை பேஸ்புக்கில் வெளியிடாமல் இருக்க பணம் வேண்டும் என மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அழகி, பயம் காரணமாக பல தவணைகளாக 8 லட்ச ரூபாய் வரை அமலேஷுக்கு கொடுத்திருக்கிறார். பிறகும் போட்டோக்களை, பேஸ்புக்கில் வெளியிடப் போவதாக அமலேஷ் மிரட்டி வந்ததால் அழகிக்கு மனஉளைச்சல். இதையடுத்து குமரன் நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் அமலேஷ் மற்றும் அவருடன் சேர்ந்து பெண்ணை மிரட்டியதாக கோகுல், ருத்ரா, மைக்கேல் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பிறகு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.