கல்வி நிலையங்களில் பொருட்காட்சி கூடாது : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கல்வி சாராத கண்காட்சி மற்றும் பொருட்காட்சிகளை கல்வி நிலைய வளாகங்களில் நடத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் அங்கேரிபாளையத்தை சேர்ந்த மாணவர் கதிர்வேல் என்பவர் தன் கல்லூரி வளாகத்தில் பொருட்காட்சி நடத்துவதற்கு தடை கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், வரும் காலத்தில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் அரசு மற்றும் தனியார் பொருட்காட்சிகளை நடத்தக்கூடாது என்றார். வணிகரீதியான செயல்களை செய்ய கல்வி நிலையங்கள் உகந்த இடம் இல்லை என்று தெரிவித்தார்.
மேலும், வரும் காலங்களில் எந்த மாதிரியான நிகழ்ச்சிகளை கல்வி நிலைய வளாகங்களில் அனுமதிப்பது என அரசு விதிமுறைகள் வகுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதே போல் மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையிலான கல்விக் கண்காட்சிகளை, அறிவியல் கண்காட்சிகளை நடத்துவதில் எந்த தடையும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.