
'அன்பு இன்ப சுற்றுலா' என்ற பெயரில் கீழக்கடையத்தை சேர்ந்த அன்பு என்பவர் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த சுற்றுலாவுக்காக நபர் ஒருவருக்கு தங்குமிடம் தவிர்த்து 1600 ரூபாய் கட்டணமாக பெறப்பட்டுள்ளது. மேலும் 3 வயது முதல் 10 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு 800 ரூபாயாக கட்டணமானது வசூலிக்கப்பட்டுள்ளது. மூன்று நாள் சுற்றுலா பயணமாக கடந்த 29ஆம் தேதி கடையத்தில் இருந்து பேருந்து புறப்பட்டுள்ளது.
அங்கிருந்து சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவில், கொச்சி கடற்கரை ,கொடுங்கலூர் மாரியம்மன் கோவில் மற்றும் குருவாயுருக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இதன் பின் மேட்டுப்பாளையத்தில் தங்கிய அவர்கள், அங்கிருந்து உதகைக்கு சென்று சுற்றுலா தலங்களை பார்வையிட்டுள்ளனர். செப்டம்பர் 30 ஆம் தேதி உதகையை பார்த்த பின்னர், கோவை மாவட்டம் மருதமலைக்கு சுற்றுலா செல்ல இருந்த நிலையில் விபத்தானது அரங்கேறியுள்ளது. இவர்கள் அக்டோபர் 1 ஆம் தேதி மாசாணியம்மன் கோயில், பழனி, மதுரை திருப்பரங்குன்றம் செல்லவும் திட்டமிட்டிருந்துள்ளனர்.
இந்நிலையில் விபத்தில் பாதிப்பு அடைந்தவர்கள் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர். அவர்களின் நிலை குறித்து கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் நிர்மலா அவர்கள் கூறியதாவது,
“ விபத்தில் பாதிப்படைந்தவர்களில் ஒருவரான செல்லம்மாளின் நிலை சற்றே கவலையளிக்கும் விதமாக உள்ளது. முதுகெலும்பு மற்றும் விலா எலும்புகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் மூச்சு விடுவதற்கு அவருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. முப்பிடாத்தி என்பவரை பொறுத்தவரையில் கை கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தற்போது மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுபவர்கள் அனைவருக்கும் சிறந்த சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் தலையில் ஏற்படும் காயங்களுக்கு நிபுணத்துவத்துடன் கூடிய சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.சிகிச்சை பெற்று வருபவர்களில் ஒருவருக்கு Attender இல்லை. இருப்பினும் மருத்துவர்கள் நல்ல கவனிப்புடன் அவரை கண்காணித்து வருகின்றனர். 25 படுக்கைகளுடன் சிறப்பு மருத்துவ குழு தயார் நிலையில் உள்ளது” என்று கூறினார்.