உயரமான பாலத்தில் உயிரை பணயம்வைத்து கைப்பிடி சுவரில் நடந்து சென்ற இளைஞரால் பரபரப்பு
ஆசியாவிலேயே மிக உயரமான மாத்தூர் தொட்டிப் பாலத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் பாலத்தின் கைப்பிடி சுவர்மீது நடந்து செல்லும் இளைஞரின் செயலால் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது.
குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் முக்கிய சுற்றுலா தலமாக மாத்தூர் தொட்டி பாலம் உள்ளது. ஒரு மலை பகுதியில் இருந்து மற்றொரு மலை பகுதிக்கு விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை கொண்டு செல்ல 104 அடி உயரத்தில் 28 தூண்களை உதவியோடு 1204 அடி நீளத்தில் கட்டப்பட்டுள்ளது மாத்தூர் தொட்டிப்பாலம்.
இந்நிலையில், அழகான இயற்சை சூழலோடு அமைந்துள்ள இந்த பாலத்தை பார்த்து ரசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பாலத்தில் பாதுகாப்பாக நடந்து செல்ல பாலத்தின் இருபுறமும் கைப்பிடி சுவர் அமைக்கப்பட்டது. இந்த நடைபாதை வழியாக பாலத்தின் ஒரு புறத்தில் இருந்து மறுபுறம் வரை நடந்து சென்று பாலத்தின் மேல்பகுதியில் நின்று இயற்கை அழகை ரசித்துச் செல்வர்.
இதையடுத்து இங்கு போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லை என சுற்றுலா பயணிகளும் ஊர்மக்களும் குற்றம்சாட்டும் நிலையில், இந்த மாதம் இரண்டு பேர் இந்த பாலத்தில் இருந்து குதித்து தற்க்கொலை செய்துகொண்டனர். இந்த நிலையில், பாதுகாப்பற்ற கைப்பிடி சுவற்றில், ஒரு இளைஞர் நடந்து செல்வதை அங்கிருந்த நபர் வீடியோ பதிவு செய்து புதிய தலைமுறைக்கு அனுப்பி வைத்தார்.
ஆபத்தான முறையில் சாகசங்களில் ஈடுபடும் இளைஞர்களால் பயணிகளில் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதால் இந்த பகுதியில் புறக்காவல் நிலையம் அமைத்து இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.