தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: பலியானோர் குடும்பத்தினருக்கு கூடுதல் நிதியை வழங்கிய கனிமொழி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: பலியானோர் குடும்பத்தினருக்கு கூடுதல் நிதியை வழங்கிய கனிமொழி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: பலியானோர் குடும்பத்தினருக்கு கூடுதல் நிதியை வழங்கிய கனிமொழி

தூத்துக்குடி துப்பாக்கிச்‌ சூட்டில்‌ உயிரிழந்த 13 பேரின்‌ குடும்பத்தினருக்கு கூடுதலாக தலா 5 லட்சம்‌ ரூபாய்‌ வீதம்‌, மொத்தம்‌ 65 லட்சம்‌ ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டிருக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் மக்கள் நடத்திய போராட்டத்தின் போது கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

ஆணையத்தில் அறிக்கையில் இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான அப்போதைய மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் 17 காவல்துறை அதிகாரிகள் காவலர்கள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் குற்றவியல் வழக்கும் பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை ஒரு டி.எஸ்.பி உள்ளிட்ட நான்கு காவலர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டு சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். மற்ற காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

இதனிடையே “துப்பாக்கிச்‌ சூட்டில்‌ உயிரிழந்த 13 பேரின்‌ குடும்பத்தினருக்கு கூடுதலாக 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும்‌” என்று தமிழக சட்டப்பேரவையில்‌ கடந்த செப்டம்பர் 19ம் தேதியன்று விசாரணை ஆணையம்‌ அரசுக்கு அளித்த அறிக்கையின் மீது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதனடிப்படையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்‌ சூட்டில்‌ உயிரிழந்த 13 பேரின்‌ குடும்பத்தினருக்கு கூடுதலாக தலா 5 லட்சம்‌ ரூபாய்‌ வீதம்‌, மொத்தம்‌ 65 லட்சம்‌ ரூபாயினை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வழங்கினார். இந்நிகழ்ச்சியில், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், தூத்துக்குடி மேயர் ஜெகன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆகியோர் உடனிருந்தனர்.

இதுகுறித்து உயிரிழந்த ஸ்னோலினின் தாயார் பேசிய போது, “தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும், உயிரிழந்த குடும்பத்திற்கு அப்போதைய அதிமுக அரசு 20 லட்சம் கொடுத்தது. தற்போதைய திமுக அரசு 5 லட்சம் கொடுத்திருக்கிறது. இந்த துப்பாக்கிச் சூட்டை தூண்டியவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு செய்தவர்களை கூண்டில் ஏற்ற வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com