வடக்குப்பட்டு அகழ்வாராய்ச்சி: 4000 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட தங்கம் கண்டுபிடிப்பு

வடக்குப்பட்டு அகழ்வாராய்ச்சி: 4000 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட தங்கம் கண்டுபிடிப்பு
வடக்குப்பட்டு அகழ்வாராய்ச்சி: 4000 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட தங்கம் கண்டுபிடிப்பு

வடக்குப்பட்டு ஊராட்சியில் நடைபெற்று வரும் தொல்லியல் துறை அகழாய்வில் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட தங்கம் கிடைத்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு கிராமத்தில் அகழாய்வு செய்ய இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த ஜூலை 3ஆம் தேதி தொல்லியல் துறை சென்னை மண்டல கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையில் அகழாய்வு பணி துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக நடைபெறும் இந்த அகழாய்வில் இடை கற்காலம், வரலாற்று தொடக்க காலம் மற்றும் வரலாற்று கால தொல்லியல் சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அகழாய்வு தொடங்கிய பகுதியில் வரலாற்று காலத்தைச் சேர்ந்த 3 செங்கல் சுவர்கள் உட்பட பல்வேறு வரலாற்று எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து அகழாய்வு பணி தொல்லியல் மேட்டின் தென்கிழக்கு பகுதியில் சில தினங்களுக்கு முன் துவங்கப்பட்டது. இதில் கருப்பு மற்றும் சிவப்பு நிற பானை ஓடுகள், வண்ணம் பூசிய பானை ஓடுகள் மற்றும் குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகள், மற்றும் ரோமானிய ஓடுகளும் கண்டறியப்பட்டன. மேலும் 1 1/2 கிராம் அளவில் தங்கத்தால் ஆன அணிகலன்கள் 2 கிடைத்துள்ளது. இது தவிர கண்ணாடி அணிகலன்கள், சுடுமண் பொம்மைகள் மற்றும் சுடுமண்ணால் செய்யப்பட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளது.

இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகையில், சுடுமண் காதணிகள் , தங்க அணிகலன்கள், சுடுமண் வட்ட சில்லுகள், இரும்பு பொருட்கள் மற்றும் வளையல் துண்டுகள் போன்ற தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன என்றும், இவை 4000 ஆண்டுகள் முதல் 10000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொருட்களாக இருக்கலாம் என்றும், முன் வரலாற்று கால எச்சங்களை தொடர்ந்து இடை கற்காலத்தை சேர்ந்த கருவிகளான கிழிப்பான், மற்றும் அம்பு முனைகள் கிடைத்துள்ளன என்றும், அகழாய்வு பணி தொடர்ந்து நடைபெறுவதால் பல்வேறு சான்றுகள் கண்டறிய வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com