விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு: உமா மீது நடவடிக்கை !
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் உமா விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேட்டில் ஈடுபட்டதாக முதற்கட்ட விசாரணையில் நிரூபணமாகியுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழத்தின் கீழ் தேர்வெழுதிய மாணவர்களில் 3 லட்சத்து 2 ஆயிரத்து 380 மாணவர்கள் விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்திருந்தனர். மறுமதிப்பீட்டுக்குப் பின் அவர்களில் 73 ஆயிரத்து 733 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 16 ஆயிரத்து 636 பேர் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் மாணவர்களிடம் தலா பத்தாயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்றுக்கொண்டு மறுமதிப்பீட்டில் தேர்ச்சியடைய வைத்ததாக அண்ணா பல்கலைக்கழகத்தின் அப்போதைய தேர்வுக் கட்டுப்பாட்டாளரான உமா மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. அதனைதொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மண்டல அதிகாரிகள் விஜயகுமார், சிவக்குமார் மற்றும் விடைத்தாள்களை திருத்திய உதவி பேராசிரியர்கள் 7 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.
இதற்கிடையில் விஜயகுமார், சிவக்குமார் ஆகியோர் வீடுகளிலும் அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய விசாரணையில் தேர்வுத்தாள் மதிப்பீடு தொடர்பான ஆவணங்களும் உமா வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அவர் அசையா சொத்துகளை வாங்கியதற்கான ஆவணமும் சிக்கியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் விடைத்தாள் மறுமதிப்பீட்டில் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உமா முறைகேட்டில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் நிரூபணமாகியுள்ளது. உமா முறைகேட்டில் ஈடுபட்டது நிரூபணமானதால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் முழுமையாக ஆய்வு நடத்தி அனைத்து உண்மைகளும் வெளிக் கொண்டுவரப்படும் எனவும் துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
மேலும், திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியின் முதல்வர் பொறுப்பில் இருந்த விஜயகுமார் நீக்கம் செய்யப்பட்டார்.