Fraud
FraudPT Desk

இன்ஸ்டா வழியே முன்னாள் ராணுவ வீரரிடம் பண மோசடி - லட்சங்களில் பணத்தை இழந்த சோகம்

நம்பிக்கையடைந்த முருகன் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ரூ.32 லட்சத்தை மர்ம நபர்கள் சொல்லும் பல்வேறு வங்கி கணக்குகளில் முதலீடு செய்துள்ளார்.
Published on

புதுச்சேரியில் இன்ஸ்டாகிராம் மூலம் அதிக வருமானம் தருகிறோம் என்று இணைய வழி மோசடிக்காரர்கள் கூறியதை நம்பி ரூ.62 லட்சத்தை இழந்த முன்னாள் ராணுவ வீரர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Instagram
InstagramPT Desk

புதுச்சேரி முருங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் முருகன் (56). முன்னாள் ராணுவ வீரரான, இவர் கடந்த மாதம் சமூக வலைதளங்கள் மூலமாக பணம் சம்பாதிக்க ஏதேனும் வழியுள்ளதா என்று தன்னுடைய செல்போனில் தேடியுள்ளார். அப்போது இன்ஸ்டாகிராமில் என்டர்டைன்மென்ட் ஒன் என்ற போலி நிறுவனத்திலிருந்து ஒரு லிங்க் வந்துள்ளது. அதில் பதிவிட்டிருந்த மர்ம நபர்கள், நீங்கள் முதலீடு செய்யும் பணத்துக்கு 20 சதவீதம் அன்றைய தினமே உங்களுக்கு வருமானம் கிடைக்கும் என்றும், முதல் முறை முதலீடு செய்யும் பணத்துக்கு ஈடாக அதே அளவு பணம் போனஸாக தருவோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனை நம்பிய முருகன் கடந்த ஜனவரி மாதம் ரூ.10,500 முதலீடு செய்துள்ளார். அவர்களும் அதற்கு ஈடாக ரூ.10,500 பணத்தை போட்டு 30 வீடியோக்களை அனுப்பி விமர்சனம் (ரிவ்யூ) செய்ய வேண்டும் என்று சொல்லியுள்ளனர். அதனை பார்த்து விமர்சனம் சொன்னதும் அவரது வங்கி கணக்கில் ரூ.22 ஆயிரம் பணம் அனுப்பியுள்ளனர். இதனால் மிகுந்த நம்பிக்கையடைந்த முருகன் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ரூ.32 லட்சத்தை மர்ம நபர்கள் சொல்லும் பல்வேறு வங்கி கணக்குகளில் முதலீடு செய்துள்ளார். இதையடுத்து அவர் சம்பாதித்த லாபத்துடன் சேர்த்து வங்கி கணக்கில் ரூ.58 லட்சம் பணம் இருப்பதாக அந்த என்டர்டைன்மென்ட் ஒன் ஆப்பில் காட்டியுள்ளது.

cyber crime
cyber crimeRepresentational Image

அந்தப் பணத்தை முருகன் எடுக்க முயற்சித்தபோது, பிழை (Error) காட்டுகிறது என்றும், இதற்கு நீங்கள் வரி கட்டினால் அந்தப் பணத்தை எடுக்க முடியும் என்று கூறவே, மீண்டும் அவர்கள் சொன்ன பல வங்கி கணக்குகளில் மேலும் பணத்தை செலுத்தியுள்ளார். இதுபோல் அவர் ரூ.61 லட்சத்து 79 ஆயிரம் பணம் செலுத்தியுள்ளார். இதனால் அவரது கணக்கில் மொத்தமாக ரூ.1.15 கோடி இருப்பதாக காட்டுவதாகவும், அந்தப் பணத்தை எடுக்க இன்னமும் வரி செலுத்த வேண்டும் என்றும் மர்ம நபர்கள் கூறியுள்ளனர். இதன் பிறகுதான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த முருகன் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com