“ஆளுநரின் அரசியல் கருத்துகளை ஏற்றுக் கொள்ள முடியாது” – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

“ஆளுநர் ஒரு கட்சியின் பிரதிநிதி என்பதை வெளிக்காட்டுவது போல் சில பேச்சுகள் அமைகிறது. அவர் பேசுகிறாரா, அறிக்கை வருகிறதா என்று தெரியவில்லை. அவர் பேசும் சில அரசியல் கருத்துகளை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
 செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூpt desk

வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் அதிமுக பொன்விழா மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி வலையாங்குளம் தேசிய நெடுஞ்சாலை அருகே நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்தில் நேற்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா, “அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனைபடி பொன்விழா மாநாடு நடத்துவதற்காக இந்த பகுதியில் உள்ள இடத்தை தேர்வு செய்துள்ளோம். திருப்பரங்குன்றத்தில் அண்ணா மாநாடு நடத்திய போது கோடு உயர்ந்ததோ, குன்றம் தாழ்ந்ததோ என்று சொன்னார்.

செல்லூர் ராஜூ - ஆர்.பி. உதயகுமார்
செல்லூர் ராஜூ - ஆர்.பி. உதயகுமார்pt desk

50 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட இந்த இடத்தை தயார் செய்து மிகப்பெரிய மாநாட்டை நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வருகிறோம். தமிழகமே மதுரையில் ஒன்று கூடுகிற அளவிற்கு இந்த மாநாடு அமையும். கூட்டணி கட்சிகளை அழைப்பது குறித்து தலைமை கழகம் முடிவு செய்யும். 50 லட்சம் முதல் ஒரு கோடி பேர் வரை வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசிய போது, “தமிழக அளவில் மாநாட்டை நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம், தென் தமிழகத்தின் தலைநகராக இருக்கக்கூடிய மதுரையில் இந்த மாநாடு நடத்துவதற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் சீரிய முயற்சியில், ராஜன் செல்லப்பா தலைமையில் இந்த இடத்தை தேர்வு செய்துள்ளோம். தற்போது ஆரம்பப் பணிகளை ஆய்வு செய்தோம்.

admk leaders
admk leaderspt desk

அண்ணா காலத்தில் பழனியில் திமுக மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டை பற்றி தான் அவர்கள் இன்றும் அதிகம் பேசுவார்கள். அன்று ஊடகங்கள் கிடையாது, எஸ்.எஸ்.ராஜேந்திரனின் திரைப்படத்தில் கூட அந்த மாநாட்டை பற்றி விளம்பரப்படுத்தப்பட்டது. அந்த அளவிற்கான மாநாடு, தற்போது மதுரையில் நடைபெற உள்ளது. எல்லோரும் பாராட்டும் அளவுக்கு இந்த மாநாடு நடைபெற வேண்டும் என்பதில் முனைப்புடன் உள்ளோம். வருகிற 2024 தேர்தலுக்கான வெற்றிப்படியாகவும், 2026-ல் ஆட்சி மாற்றத்துக்கான மாநாடாகவும் இது நிச்சயமாக அமையும்” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் தரப்பில் அவரிடம் ‘செங்கோல் கொடுக்கப்பட்டது, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறி’ என்று அண்ணாமலை கூறி இருப்பது குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்...

“காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு. அதுபோல அண்ணாமலைக்கு அவர்கள் கட்சி பெரியது, எங்களுக்கு எங்கள் கட்சி பெரியது. எங்கள் கட்சியை வெல்ல யாராலும் முடியாது. எல்லாரும் நீச்சல் அடிக்கலாம்... ஆனால் கரை சேர்ந்தது அதிமுகவினர் தான். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கேலிக்கூத்தாக இருக்கிறது. ஆளுங்கட்சி துணையோடுதான் சாராயம் போன்ற போதை பொருள் கடத்தல் எல்லாம் நடைபெறுகிறது. இலங்கைக்கு கோடிக்கணக்கில் போதை பொருள் கடத்தப்படுகிறது. இரண்டு மாவட்டத்தில் மட்டும் 25 பேர் இறந்திருப்பது பெரிய கேவலம், இதுதான் திராவிட மாடல்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூpt desk

காவல்துறை தலைமை அதிகாரியிடம், ‘ஆளுங்கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள்’ என்று முதல்வர் கூறினால், தமிழகத்தில் எந்த மூலைமுடுக்கிலும் போதைப் பொருள் இருக்காது. தன் கட்சிக்காரர்கள்தான் போதைப்பொருள் விற்று சம்பாதிக்கிறார்கள் என்று முதல்வருக்கு தெரியும். டாஸ்மாக்கிலேயே இன்று கலர் சாராயம் விற்கப்படுகிறது என்று பேசப்படுகிறது. எந்த காலத்திலும் திமுக ஆட்சிக்கு வந்தால் அது தமிழக மக்களுக்கு விரோதமான ஆட்சியாகத்தான் இருக்கும்.

ஆளுநர் ஒரு கட்சியின் பிரதிநிதி என்பதை வெளிக்காட்டும் அளவிற்கு சில பேச்சுகள் அமைகிறது. அவர் பேசுகிறாரா அல்லது அறிக்கை வருகிறதா என்று தெரியவில்லை. அவர் பேசும் சில அரசியல் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாது. அதேசமயம் ஆளுநரை ஆளும் கட்சிகள் விமர்சனம் செய்வதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆளுநர் இல்லாமல் ஒரு அணுவும் அசையாது. அவர் அனுமதியோடு தான் எந்த திட்டங்களையும் நிறைவேற்ற முடியும். இவர்களுடைய மோதலினால் தமிழக மக்களுடைய நல்வாழ்வு தான் பாதிக்கும். இந்த சூழல் ஆளுங்கட்சிக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லதல்ல.

governor RN Ravi
governor RN Ravipt desk

இதனால் தான் புரட்சித் தலைவரும் புரட்சித் தலைவியும், அரசியல் கருத்துக்களில் மாறுபாடுகள் இருந்தாலும் மத்திய அரசை ஆதரித்தது தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக விட்டுக் கொடுத்து சென்றார்கள். மோடியா லேடியா என்று கேட்தற்கு தமிழக மக்கள் லேடி தான் என்று சொன்ன பிறகும் கூட, அகில இந்திய அளவில் மோடி தலைமையில் ஆட்சி அமைந்ததற்கு ஆதரவு கொடுத்தவர் புரட்சித் தலைவி அம்மா.

எப்போதெல்லாம் தமிழக மக்களுக்கு நல்லது நடைபெறுகிறதோ அப்போதெல்லாம் அவர் மத்திய அரசை ஆதரிப்பார்; அதேபோல விரோதமான செயலை மத்திய அரசு கொண்டு வந்தால் அதை துணிவுடன் எதிர்ப்பாரும் கூட!. காவிரி விவகாரத்தில் 48 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கிய வரலாறு அதிமுகவையே சேரும், அதற்கு நாயகன் எடப்பாடி தான்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com