“பட்ஜெட் ஒரு டிஜிட்டல் டிமிக்கி; இனி சொத்துவரி, பேருந்து கட்டணம் உயரும்” - ஜெயக்குமார்

“பட்ஜெட் ஒரு டிஜிட்டல் டிமிக்கி; இனி சொத்துவரி, பேருந்து கட்டணம் உயரும்” - ஜெயக்குமார்
“பட்ஜெட் ஒரு டிஜிட்டல் டிமிக்கி; இனி சொத்துவரி, பேருந்து கட்டணம் உயரும்” - ஜெயக்குமார்

இனிமேல் சொத்துவரி, பேருந்து கட்டணம், மின் கட்டணம் போன்றவை உயரத்தான் போகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார். 

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது. தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பொது பட்ஜெட் உரையை தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலை புறக்கணித்து அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ’’எங்களுடைய ஆட்சிக்காலத்தில் நீட் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது நீட் தேர்வின்மீது மாணவர்களுக்கு ஆர்வம் இல்லை என்று கல்வி அமைச்சர் கூறுகிறார். அதேபோல் கடந்தமுறையைவிட இந்தமுறை நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது. நீட் தேர்வுக்கு தயாராக மாணவர்களை உற்சாகப்படுத்தி, வருங்காலத்தில் நீட் தேர்வு இல்லாத நிலையை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்திருந்தால் மாணவர்களும் படித்திருப்பார்கள். ஆனால் தவறான கருத்தை பரப்பி, மாணவர்களைக் குழப்பி, தவறான முறையில் நீட் விஷயத்தை கையாண்டதால் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.

அதேபோல், எங்களுடைய கடன் 5 லட்சம் கோடி என்பது 2022ல் வரக்கூடியது. சரியான கடன் தொகை என்பது நான்கே முக்கால் கோடிதான். ஆனால் திமுக ஆட்சியில் ஏற்பட்ட ஒன்றரை லட்சம் கோடி கடனுக்கான வட்டியை அதிமுகதான் கட்டியது. நிதி நெருக்கடி அதிகமாக இருந்தபோதிலும் அதிமுக மக்களுக்குக் கொடுத்த அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றி இருக்கிறது. தேர்தல் அறிக்கையில் சொல்லாத பல நிவாரண நிதிகளையும் அதிமுக ஆட்சியில் கொடுத்திருக்கிறோம்.

அரசு ஊழியர்களுக்கு நிறைய சலுகைகள் மற்றும் அகவிலைப்படியைக் கொடுத்திருக்கிறோம். ஆனால் திமுகவை பொருத்தவரை, பரிசீலிக்கிறோம், ஆராயப்படும், தெரிவிக்கப்படும் என்றே நிதியமைச்சர் கூறுகிறார். மொத்தத்தில் இந்த பட்ஜெட்டை ஒரு ‘டிஜிட்டல் டிமிக்கி’ என்றுதான் சொல்லவேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அதில் மாநிலத்தின் சொந்த வரிவருவாய், மாநிலத்தின் செலவு, மாநிலத்தின் நிதி பற்றாக்குறை மற்றும் அதை எப்படி ஈடுசெய்வது என்பது குறித்த அனைத்து விவரங்களும் இடம்பெறும். ஆனால் பட்ஜெட் தாக்கலுக்கு முன்பே வெள்ளை அறிக்கையில் தகவல்களை வெளியிட்டது விதிமீறல். இந்த வெள்ளை அறிக்கை என்பது வெறும் வெற்று அறிக்கைதான்.

2011ல் கஜானாவை காலி செய்துவிட்டுதான் திமுக ஆட்சி சென்றது. அதன்பிறகு வந்த அதிமுக ஆட்சிதான் அனைத்தையும் சரிசெய்தது. இனிமேல் சொத்துவரி, பேருந்து கட்டணம், மின் கட்டணம் போன்றவை உயரத்தான் போகிறது’’ என்று கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com