ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் நிலைப்பாடு என்ன? முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பதில்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் நிலைப்பாடு என்ன? முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பதில்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் நிலைப்பாடு என்ன? முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பதில்!

கூட்டணி கட்சியின் சார்பில் பாஜக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டால் நிச்சயமாக அதிமுக சார்பில் ஆதரவு தெரிவிப்போம் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்குத் தேர்தலில் தனது நிலைப்பாடு குறித்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுக சார்பில் போட்டியிட போவதாக அறிவிப்பு வெளியிட்டார். ஒருங்கிணைப்பாளராக தொடர்ந்து தொடர்வதாகவும், தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 2026 வரை பதவிக்காலம் இருப்பதால், அதிமுக சார்பில் போட்டியிட முழு உரிமை தனக்கு இருப்பதாக ஓபிஎஸ் சுட்டிக்காட்டினார்.

இரட்டை இலை சின்னம் கோரி A மற்றும் B பார்மில் கையொப்பம் இடுவேன் எனவும், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் எனவும் தெரிவித்த அவர், உள்ளாட்சித் தேர்தலில் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் இணை ஒருங்கிணைப்பாளருக்கு, தான் இரட்டை இலை சின்னத்திற்கு கையெழுத்து போட்டு அனுப்பியதாகவும் இபிஎஸ் தான் அந்த தருணத்தில் கையெழுத்து இட வில்லை எனக் குறிப்பிட்டார்.

எனவே இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம் என தெரிவித்த அவர், ஒன்றிணைந்த வலுவான அதிமுகவிற்கு பேச்சுவார்த்தை நடத்த தயார் என குறிப்பிட்டார். மேலும் பல்வேறு அணிகளாக பிளவுபட்ட நிலையில் தேர்தலில் போட்டியிட இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்படாத சூழலில், தேர்தல் ஆணையம் வழங்கும் சின்னத்தில் கட்டாயம் போட்டியிடுவோம் என ஓபிஎஸ் தெரிவித்தார்.

அதேபோல் கூட்டணி கட்சிகள் தங்கள் அணியிடமும் தொடர்ந்து பேசி வருவதாகவும், பாஜக சார்பில் ஈரோடு கிழக்கு தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டால், தேசிய கட்சி என்ற முறையில் உறுதியாக பாஜக போட்டியிட நாங்கள் ஆதரவு தெரிவிப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும் இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கு எந்த காலத்திலும் தான் தடையாக இருக்க மாட்டேன் என தெரிவித்த அவர், குழப்பமான மனநிலையை உருவாக்கியவர்கள் நாங்கள் அல்ல எனவும் அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை எனக் கூறினார்.

அதேசமயம் இதுவரை இபிஎஸ், சசிகலா உள்ளிட்ட மற்ற தரப்பில் இருந்து சமரச பேச்சுவார்த்தை குறித்து எதுவும் பேசவில்லை என தெரிவித்த அவர், அணைகள் இணைப்பிற்கு பேச்சுவார்த்தை நடத்திட ஒத்துழைப்பு தருவேன் எனவும் குறிப்பிட்டார். சட்டமன்ற விதிகள் படி எதிர்க்கட்சித் தலைவர் பதவி மட்டுமே அமலில் இருப்பதாகவும், எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி என்பது சபாநாயகர் விருப்பத்தில் கட்சியின் பரிந்துரைப்படி கொடுக்கப்பட்டது, எனவே யாரைத் துணைத் தலைவராக அமர வைக்க வேண்டும் என்பது சபாநாயகரின் விருப்பம் என தெரிவித்தார்.

அதிமுக பிளவுபட்ட அணிகளாக தேர்தலை சந்திப்பதற்கு எங்களுக்கு எந்த விருப்பமும் இல்லை எனவும், அதிமுக தொண்டர்களுக்கான இயக்கம், தொண்டர்கள் தனது தரப்பில் இருப்பதாகவும், அதிமுக சட்ட விதிகளுக்கு புறம்பாக எந்த செயலையும் யாராலும் மேற்கொள்ள முடியாது என குறிப்பிட்டார். செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன், புகழேந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com