விஜய் முன்னிலையில்., தவெகவில் இணைந்த ஓ.பி.எஸ் ஆதரவாளர்.!
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஜே.டி.சி பிரபாகர், அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசலுக்கு பிறகு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார். இது, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட பல முன்னாள் அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் தவெகவில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் நடந்துள்ளது.
அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசலுக்கு பிறகு ஓபிஎஸ் ஆதரவாளராகவும், அவரின் அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவிலும் இணைந்து செயல்பட்டு வந்த அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ ஜே.டி.சி பிரபாகர் இன்று, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்திருக்கிறார். ஏற்கனவே, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் தவெகவில் இணைந்து பயணித்து வரும் நிலையில், அவருக்கு தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டிருந்தது. மேலும், செங்கோட்டையன், பல முன்னாள் அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் தவெகவில் இணைவார்கள் எனத் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து, ஈரோட்டில் நடைபெற்ற தவெகவின் பரபரப்புரைக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயும் தங்களுடன் இணைந்து பயணிக்க வருபவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தான், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஜே.டி.சி பிரபாகர் தவெகவில் இணைந்திருக்கிறார். தொடர்ந்து, வரும் பொங்கலுக்கு 40-க்கும் மேற்பட்ட முக்கிய நபர்களை இணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
தவெகவில் இணைந்த பிறகு பேசிய முன்னாள் எம்.எல்.ஏ ஜே.டி.சி பிரபாகர், “ எம்.ஜி.ஆரைப் பார்த்தபோது என்ன மகிழ்ச்சி ஏற்பட்டதோ அதேபோல் இன்று நான் விஜயை சந்தித்தபோது ஏற்பட்டது. ஒரு அமைதிப் புரட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு மாற்றம் தேவையாக இருக்கிறது. அதற்காக தவெகவில் இணைந்து இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

