திடீர் நெஞ்சுவலி காரணமாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி

திடீர் நெஞ்சுவலி காரணமாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி
திடீர் நெஞ்சுவலி காரணமாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்று சமீபத்தில் எம்.எல்.வான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திடீர் நெஞ்சு வலி காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிட்டு 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தென்னரசு 43 ஆயிரத்து 923 ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவினார்.

இந்த இடைத்தேர்தலில் அவர் வெற்றிபெற்றதையடுத்து, கடந்த மார்ச் 10ஆம் தேதி சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார். அன்று, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் சபாநாயகர் அப்பாவு, ஈவிகேஎஸ்-க்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிலையில், திடீர் நெஞ்சு வலி காரணமாக இன்று சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவக் குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா, கடந்த ஜனவரி மாதம் 4ம் தேதி மரணம் அடைந்தார். இவர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் ஆவார். இதையடுத்தே, மகன் நின்று வெற்றிபெற்ற அதே தொகுதியிலேயே ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் நின்றார். திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பில் வேட்பாளராக அத்தொகுதியில் நிறுத்தப்பட்டிருந்தார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெற்ற இந்த இடைத்தேர்தலில், திமுக-வின் கூட்டனி கட்சிகள் மட்டுமன்றி மக்கள் நீதி மய்யமும் இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் விரைவில் நலம் பெற அரசியல் தலைவர்களும், அவரது ஆதரவாளர்களும் தங்கள் பிரார்த்தனைகளை தெரிவித்துவருகின்றனர்.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com