"முதல்வரல்ல... அண்ணாமலைக்கு மக்களே பாடம் புகட்டுவார்கள்!"- ஈவிகேஎஸ் இளங்கோவன் பேச்சு

"முதல்வரல்ல... அண்ணாமலைக்கு மக்களே பாடம் புகட்டுவார்கள்!"- ஈவிகேஎஸ் இளங்கோவன் பேச்சு
"முதல்வரல்ல... அண்ணாமலைக்கு மக்களே பாடம் புகட்டுவார்கள்!"- ஈவிகேஎஸ் இளங்கோவன் பேச்சு

“அண்ணாமலைக்கு, முதல்வர் பாடம் புகட்ட வேண்டிய அவசியமில்லை. மக்களே பாடம் புகட்டுவார்கள்” என ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியுள்ளார்.

சென்னை கிழக்கு மாவட்டம் 57-வது வட்ட திமுக சார்பில் ‘திரைவானம் போற்றும் தமிழ் வானம்’ என்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஈரோடு கிழக்கு எம்எல்ஏ ஈவிகேஎஸ். இளங்கோவன், சென்னை மேயர் ஆர்.பிரியா, நடிகர்கள் பொன்வண்ணண், ராஜேஷ், எம்.எஸ்.பாஸ்கர், போண்டா மணி மற்றும் இயக்குநர் ஆர்.பாண்டியராஜன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.

இந்த விழாவில் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேசுகையில், “ஈரோடு வெற்றிக்குப் பிறகு ஸ்டாலின் 70வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் நான் பங்கேற்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஈரோடு தேர்தலில் நான் வெற்றி பெற்றேன் என்று சொல்லுவதை விட முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார் என்று சொல்லுவது தான் சரியாக இருக்கும்.

ஸ்டாலின் முதல்வராக பதவிக்கு வந்த பிறகு பல சாதனைகளை செய்துள்ளார். இந்தியாவில் ஆட்சிக்கு வந்த 2 வருடங்களில யாரும் இத்தகைய சாதனைகளை செய்ய முடியாது. அதனால் தான் ஆங்கில பத்திரிகைகள் சிறந்த முதல்வர் என்று நம் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை பாராட்டுகிறது. தமிழ்நாட்டில் நடைபெறும் ஆட்சி ஒரு கட்சியின் ஆட்சி அல்ல. ஒரு இனத்தின் ஆட்சி. முதல்வர், ஒரு போர் வீரரைப் போல மக்களை காக்க வேண்டும் என்று பணியாற்றி வருகிறார்.

முதல்வர் ஸ்டாலினின் ஆட்சி அசைக்க முடியாத ஆட்சியாக உள்ளது. அதை அசைக்க ஒன்றிய அரசு திட்டம் தீட்டி வருகிறது. அதற்கு ஆளுநர் ரவியும் அண்ணாமலையும் தான் தூதுவர்கள். அண்ணாமலைக்கு முதல்வர் பாடம் புகட்ட வேண்டியதில்லை. தமிழ்நாடு மக்கள் பாடம் புகட்டுவார்கள். அண்ணாமலை மட்டுமல்ல அவருடன் சேர்ந்து அதிமுகவும் தமிழ்நாட்டில் காணாமல் போகும்.

மதத்தால், சாதியால் பிரிவினை செய்கின்ற பாஜகவிற்கு துணை போன காரணத்தால் தான் அதிமுக ஈரோடு தேர்தலில் தோற்றது. எப்படி டெபாசிட் வாங்கியது என்பது தான் தெரியவில்லை. அனைத்து கட்சிகளும் ஒன்று கூட வேண்டும் என்று சொல்லும் ஸ்டாலினின் வெற்றி பாதையில் நாம் செல்ல வேண்டும்.

தேர்தலில் வெற்றி பெற்று விட்டோம் என்று சாதாரணமாக இருக்கக் கூடாது. பாசிச கட்சிகளை எதிர்க்க வேண்டும். முதல்வரின் புகைப்பட கண்காட்சியை நான் பார்த்தேன். அனைவரும் அந்த கண்காட்சியை காண வேண்டும். மக்கள் மனதில் நஞ்சை விதைகின்ற மக்கள் விரோத கட்சிகளை ஒழிக்க வேண்டும். சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு காரணம் மோடி ஆட்சி தான்” என்று பேசினார்.

இவரைத் தொடர்ந்து நடிகர் போண்டா மணி பேசும்போது, “என்னை காப்பாற்றியது முதல்வர் தான். ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதித்து என்னை காப்பாற்றியது அவர் தான். தமிழ்நாடு முதல்வர் மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம். இலங்கை தமிழர்களை அகதிகள் என்று சொல்லக் கூடாது என்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றார். இந்த ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது. இந்த ஆட்சி தொடர்ந்து நடைபெற மக்களின் ஆதரவு தேவை. அடுத்த எலெக்‌ஷனில் அடித்துக் கூட கேட்பார்கள் ஓட்டை மாற்றி போட்டுவிடாதீர்கள் (நகைச்சுவையாக)” என்றார்.

இதைத் தொடர்ந்து பேச வந்த திரைப்பட இயக்குநர் பாண்டியராஜன், “கண்ணமாபேட்டையில் ஒரு நிகழ்ச்சியில் முரசே முழங்கு என்ற நாடகத்தில் முதல்வர் ஸ்டாலின் வேடமிட்டு நடித்தார். அப்போது நான் அதை தரையில் அமர்ந்து அதை ரசித்துப் பார்த்தேன். அதை கலைஞர் தரையில் அமர்ந்து பார்த்தார். இப்போது அவரின் வாழ்க்கையையே புகைப்பட கண்காட்சியாக வைத்துள்ளார்கள். அதையும் பார்த்தேன். அதில் முதல்வரின் வாழ்க்கை அழகாக கூறப்பட்டுள்ளது.

நம் ஊரில் சைக்கிளில் போவது, நடைபயிற்சி மேற்கொள்ளும் போது மற்றவர்களை விசாரிப்பது போன்ற காரியங்களை செய்வது நம் முதல்வர் தான். பொறுமையாக இருந்தால் பூமியை ஆளமுடியும். முதல்வர் பொறுத்திருந்த காரணத்தால் தான் தற்போது ஆளுகிறார். மிகவும் கஷ்டபட்டு வந்த பொறுமைசாலி நம் முதல்வர்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com