PT EXCLUSIVE | நாங்குநேரி சம்பவம்: “கைதான சிறார்களின் வளர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது”- எவிடென்ஸ் கதிர்
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் 17 வயது பள்ளி மாணவர் ஒருவரை சக மாணவர்கள் வீடு புகுந்து வெட்டியதில், அவரும் அவரது 13 வயது தங்கையும் பலத்த காயம் அடைந்தனர். அந்த வீட்டில் இருந்த முதியவரொருவர் உயிரிழந்துவிட்டார். அக்குழந்தைகள் இருவரும் அரசு மருத்துவமனையில் தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக மதுரையை சேர்ந்த எவிடன்ஸ் அமைப்பினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக எவிடன்ஸ் அமைப்பின் இயக்குநர் கதிர் நம்மிடையே பேசுகையில், “நாங்குநேரி சிறுவன் வெட்டப்பட்டதற்கு சாதி தான் அடிப்படை காரணம். தற்போது கைது செய்யப்பட்ட மாணவர்கள், பள்ளியில் படிக்கும் பொழுது பாதிக்கப்பட்ட மாணவனை சாதி ரீதியாக மிகவும் இழிவுபடுத்தி உள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுவன் பள்ளிக்குச் செல்லாமல் இருந்துள்ளார். அச்சிறுவன் நன்றாக படிக்கும் காரணத்தினால் வகுப்பு ஆசிரியர்கள் தாங்களாக முன்வந்து மாணவன் பள்ளிக்கு வராதது குறித்து அவரது பெற்றோரிடம் கேட்டிருக்கிறார்கள். பின் அவர்களை பள்ளிக்கு வரவழைத்து மாணவன் பள்ளிக்கு வராததற்கு உண்டான காரணம் குறித்து எழுத்துப்பூர்வமாக தலைமை ஆசிரியர் எழுதி வாங்கி இருக்கிறார். அதில் சக மாணவர்களால் மிகவும் துன்புறுத்தப்படுவதாகவும் சாதி ரீதியாக இழிவுபடுத்தப்படுவதாகவும் எழுதிக் கொடுத்திருக்கிறார் மாணவர்.
இதனால் ஆத்திரம் கொண்ட அதே பள்ளியில் படித்த பிற சிறார்கள், அன்று இரவே சம்பந்தப்பட்ட மாணவர் வீட்டிற்கு சென்று அவர்களை சரமாரியாக வெட்டி உள்ளனர். அப்போது உடன் இருந்த அவரது 13 வயது தங்கையையும் வெட்டி உள்ளனர். இதை தொடர்ந்து தலைமறைவாகியிருந்த 6 சிறார்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சிறார்கள் வளர்ப்பு மிகவும் அதிர்ச்சிகரமாக இருக்கிறது. கைது செய்யப்பட்டிருக்கக்கூடிய மூன்று சிறார்களும் காவல் நிலையத்தில் எந்த பதட்டமும் இல்லாமல் மிகவும் சர்வ சாதாரணமாக இருக்கிறார்கள். ரிலாக்ஸாக ஜாலியாக காவல்நிலையத்தில் இருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் இன்னும் சாதி வெறி அப்படியே இருக்கிறது. பள்ளியில் படிக்கும் பொழுது சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது ஏற்கனவே இரண்டு முறை குற்றச்சாட்டு இருக்கிறது. இதில் இன்னும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்” என்றார்.
இச்சம்பவத்தில் இதுவரை 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மாணவரின் தாயாரிடம் தொலைபேசி மூலம் பேசி நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மேலும் அமைச்சர் தங்கம் தென்னரசு, சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் நேரில் சென்று மாணவரிடம் நலம் விசாரித்தனர்.