டெங்கு காய்ச்சலால் நாளுக்கு நாள் அதிகரிக்கும் உயிரிழப்புகள் (வீடியோ)
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டெங்கு காய்ச்சலை தடுக்க சுகாதாரத்துறையினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் பரவக்கோட்டை, செருமங்கலம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெங்குவால் பாதிக்கப்பட்ட மதுஸ்ரீ என்ற 5 வயது சிறுமி, ஆகாஷ்குமார், அகிலன், ராம்பிரசாத் ஆகியோர் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த பக்கிரிபாளையம் ஊராட்சியில் கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 4 வயது சிறுவன் ராகுல் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். டெங்கு பரவுவதைத் தடுக்க சுகாதாரத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பக்கிரிபாளையம் கிராமமக்கள் புகார் தெரிவித்தனர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள முடுவார்பட்டி கிராமத்தில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 8 வயது சிறுமி அழகு மீனா நேற்று உயிரிழந்தார். மேலும், 10 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. சிறுமி உயிரிழப்பை அடுத்து முடுவார்பட்டி கிராமத்தில் முகாமிட்டுள்ள சுகாதாரத்துறையினர் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு பற்றிய உண்மை நிலவரத்தை தமிழக அரசு மறைப்பதாக சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் தெரிவித்துள்ளார்.