"ஒடிசாவில் பிறந்தாலும் எனக்கு தாய் வீடு தமிழகம்தான்"- ஓய்வு பெற்ற டிஜிபி திரிபாதி உருக்கம்

"ஒடிசாவில் பிறந்தாலும் எனக்கு தாய் வீடு தமிழகம்தான்"- ஓய்வு பெற்ற டிஜிபி திரிபாதி உருக்கம்
"ஒடிசாவில் பிறந்தாலும் எனக்கு தாய் வீடு தமிழகம்தான்"- ஓய்வு பெற்ற டிஜிபி திரிபாதி உருக்கம்

தமிழ்நாட்டின் சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றி வந்த திரிபாதி ஓய்வு பெற்றார். அவருக்கு பிரிவுபசார விழா எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடந்தது.  இந்நிகழ்ச்சியில் தற்போது சட்டம்- ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு,  சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் மற்றும் டிஜிபிக்கள், கூடுதல் டிஜிபிக்கள்,  காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். 

மேலும் ஓய்வு பெற்ற டிஜிபி லத்திகா சரண், ராதாகிருஷ்ணன் மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். 

நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற டிஜிபி திரிபாதி பேசுகையில், "1985ஆம் ஆண்டு இந்திய காவல் பணியில் சேர்ந்து, தமிழகத்திற்கு பணி ஒதுக்கப்பட்டு, 36 ஆண்டுகளாக நான் பல பொறுப்புகளில் தமிழக காவல்துறையில் பணியாற்றியுள்ளேன். இன்று பணி ஓய்வுபெறும் நான் மிகுந்த மனநிறைவுடனும், மகிழ்ச்சியுடனும் எனது பொறுப்புகளை முடித்து ஓய்வு பெறுகிறேன். இந்த 36 ஆண்டு காலத்தில் எனது பணியினை பொதுமக்களின் நலன் கருதியும், காவல்துறையின் நன்மதிப்பை மேம்படுத்துவதிலும், தமிழக அரசின் எண்ணங்களை செயல்படுத்துவதிலும் முழுமனதோடு செயலாற்றி என்னால் முடிந்தவரை மக்களின் நன்மதிப்பை பெறும் வகையில் செயலாற்றி உள்ளேன். இப்பணியில் இவ்வாறு நான் செயல்பட எனக்கு கடந்த 36 ஆண்டு காலத்தில் பல முக்கிய பொறுப்புகளை வழங்கிய தமிழக அரசுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, எனது காவல் பணியை இன்று சிறப்புற நிறைவு செய்ய வழிவகை செய்து கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு என் சார்பிலும், எனது குடும்பத்தாரின் சார்பிலும் தாழ்மையான வணக்கங்களையும், நெஞ்சார்ந்த நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த 36 ஆண்டுகாலத்தில் பலவிதமான சோதனைகள் மற்றும் பிரச்சினைகளை கையாளுவதற்கு எனக்கு உறுதுணையாக இருந்த அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் ஆண், பெண் ஆளிநர்கள் அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல், என் பணி சிறக்க எனக்கு உறுதுணையாக இருந்த பிற துறை அதிகாரிகளுக்கும், பத்திரிகை மற்றும் ஊடகத்துறை நண்பர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

பணி ஓய்வுபெறும் இந்த நன்னாளில் எனக்கு சிறப்பான ஓர் அணி வகுப்பு மரியாதையை அளித்த தமிழ்நாடு சிறப்பு காவல்படையின் ஆளிநர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒடிசா மாநிலத்தில் பிறந்து, புது தில்லியில் எனது படிப்பினை மேற்கொண்டு 1985ஆம் ஆண்டு தமிழகத்திற்கு பணி நிமித்தமாக வந்த எனக்கு, இன்று தமிழகமே எனது தாய் வீடு என்ற அளவில் எனது குடும்பமும், பிள்ளைகளும் இங்கேயே வளர்ந்து, இங்கேயே பல பணிகளில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. தொடந்து தமிழ்நாட்டிலேயே இருந்து என்னால் முடிந்த பணிகளை காவல் துறைக்கும், பொதுமக்களுக்கும் தொடர்ந்து செய்வேன் என்ற உறுதியை இன்று உங்கள் முன் தெரிவிக்க விரும்புகிறேன்" என்று ஓய்வு பெற்ற திரிபாதி பேசினார். 

தற்போது புதிதாக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு பேசுகையில், "தனக்கு மிக முக்கிய பொறுப்பை வழங்கி பெருமைப் படுத்திய தமிழக முதலமைச்சருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓய்வு பெற்ற டி.ஜி.பி திரிபாதி தனித்திறமை படைத்தவராகவும் சிறந்த பண்புகளைக் கொண்டவராகவும் திகழ்ந்து வந்துள்ளார். துணை ஆணையர், ஆணையர் என எந்தப் பதவி வகித்தாலும் தனது கடமையை சிறப்பாக ஆற்ற மிகவும் கடுமையாக உழைத்த திரிபாதி ஒரு சிறந்த தலைவரானார்.

ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்கியவர். தமிழக காவல்துறையின் சாணக்கியராக திரிபாதி திகழ்ந்துவர். ஒரு சமயத்தில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தப்பி ஓடிய கொள்ளையனை திரிபாதியே துரத்தி பிடித்தார். திட்டம் வகுப்பதில் சிறந்தவர். 

திரிபாதி-க்கு மகிழ்ச்சியான ஓய்வுக்காலம் அமைய மனமார வாழ்த்துகிறேன்" என்று டிஜிபி சைலேந்திரபாபு பேசினார். 

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேசுகையில், "தமிழ்நாடு காவல் துறையினரின் சாணக்கியனாக திகழ்ந்தவர் திரிபாதி. அனைத்து காவல் துறையினருக்கும் ஒரு முன்மாதிரியாக திகழ்ந்தார்" என்று அவர் குறிப்பிட்டு பேசினார். 

முன்னதாக தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் அணிவகுப்பு மரியாதையை திரிபாதி ஏற்றுக் கொண்டார். மேலும் திரிபாதிக்கு தமிழக காவல்துறை கூடுதல் டிஜிபி ரவி நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். திரிபாதி தனது மனைவி, மகன், மகளுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். புதிய டிஜிபி சைலேந்திரபாபுவும் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். 

கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ம்தேதி திரிபாதி தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்றார். 1985-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான 36 ஆண்டுகள் காவல்துறையில் பணியாற்றி உள்ளார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். 

இவரது மனைவி அனுஜா.  இவர்களுக்கு ஒரு மகள், பெயர் ஜிகிசா. மருத்துவம் படிக்கிறார். ஒரே மகன் ஜீத்வான், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்து விட்டு டில்லியில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

- செய்தியாளர் சுப்ரமணியன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com