“இந்த ஊர்ல மழை பெய்யலனாலும் இங்க பெய்யும்”- ‘லிட்டில் ஊட்டி’ சுவாரசியங்களை பகிரும் டாக்டர்.துரைசாமி!

தற்போதைய உலகில் மரங்களின் முக்கியத்துவம் அனைவரும் அறிந்ததே. மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என பல அமைப்புகளும் அரசுகளும் தன்னால் ஆன முயற்சிகளை மேற்கொண்டாலும் தனி மனிதர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளின் பலன் என்பது அனைத்தையும் தாண்டியது.
லிட்டில் ஊட்டி
லிட்டில் ஊட்டிptweb

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த கொப்பம்பட்டி அருகில் உள்ள கிராமம் ’காஞ்சேரி மலைப்புதூர்’. மலை அடிவாரத்தில் உள்ள கிராமம் என்றாலும் அடர் வனங்கள் ஏதும் இல்லை. உயரம் குறைந்த சிறுமரங்களையும், முள் மரங்களை மட்டுமே பார்க்க முடியும். அந்த மலை அடிவாரத்தில் பச்சை பசேலென விரிந்துள்ளது லிட்டில் ஊட்டி மரப்பண்ணை. பெயருக்கு ஏற்றவாறு ஒரு ஊட்டிதான், உள்ளே சென்றால் அவ்வளவு குளிர்ச்சி.

மாதிரிப் படம்
மாதிரிப் படம்

இந்த லிட்டில் ஊட்டி ஒரு தனிமனிதனின் கனவாகும். இதை உருவாக்கியவர் டாக்டர் துரைசாமி. எளிய குடும்பத்தில் பிறந்து ஒரு மருத்துவராக தன்னை நிலை நிறுத்திக்கொண்டவர். இயற்கையின் மீதான தனது காதலை மறக்காமல் 120 ஏக்கரில் லிட்டில் ஊட்டி மரப்பண்ணையை உருவாக்கியுள்ளார். இவரது முயற்சியால் வளர்ந்துள்ள இம்மரங்கள் சுற்றுச்சூழலுக்கு நல்ல காற்றைத் தருவதுடன், அவரது குடும்பத்துக்கு பல கோடி மதிப்புள்ள நல்ல வெகுமதியாக வளர்ந்துள்ளன.

மரப்பண்ணை உருவாக்குதலே எனது கனவு

கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட டிம்பர் மற்றும் பழ மரங்களை நடவு செய்துள்ள டாக்டர் துரைசாமி பேசுகையில், "நான் மருத்துவப் பணியில் சேர்ந்தது முதல் நிறைய மரங்கள வளர்க்கணும்னு ஆசைப்பட்டேன். மரங்கள்ல இருந்து கிடைக்கிற வருமானம் ஒருபுறமிருந்தாலும், மரங்கள் மூலமா உருவாகிற சுற்றுச்சூழல் நன்மையைப் பத்தி நான் அதிகம் யோசிப்பேன். 2001-ஆம் ஆண்டுல இருந்து மரம் நடத் தொடங்கி இன்று வரை மரம் நட்டுக்கொண்டே இருக்கிறேன். லிட்டில் ஊட்டியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் இருக்கு, இதுல நூற்றுக்கும் மேற்பட்ட மர வகைகள் இருக்கு என்பது எனக்கு மகிழ்ச்சியான விஷயம்” என்று கூறியவர், லிட்டில் ஊட்டி பல்வேறு மரங்களின் சரணாலயமாக இருக்க வேண்டும் என்பதற்காக, தொடர்ந்து பல்வேறு வகையான மரங்களை நட்டு வருவதாகவும் கூறுகிறார்.

ஈஷாவுடன் பயணம்

“பண்ணையின் ஆரம்ப காலத்துல மர விவசாயம் பத்தின ஆலோசனை பெறுவதற்கு ஈஷா மர விவசாயக் குழுவினரை தான் சந்திச்சேன். மண்ணுக்கேத்த மரங்கள தேர்வு செய்றதுல இருந்து, மர அறுவடை வரை ஆலோசனை தந்தாங்க. இன்று வரை பண்ணை வளர்ச்சிக்கு நல்ல ஆலோசனை கொடுக்குறாங்க. இந்த காடு உருவானதில ஈஷாவின் பங்கும் இருக்கு. இங்குள்ள 60,000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை ஈஷா நாற்றுப்பண்ணையில இருந்துதான் வாங்கினேன்” என ஈஷாவின் பங்களிப்பை நினைவு கூர்ந்தார்.

மழையை வருவிக்கும் மரங்கள்

“எங்களது பண்ணையில் தோராயமாக 20,000 மலைவேம்பு, 5,000 மகோகனி, 5,000 ஈட்டி மற்றும் வேங்கை, மஞ்சள் கடம்பு, கருமருது, நீர் மருது, குமிழ், பெரு மரம் போன்ற பல வகையான டிம்பர் மரங்கள் இருக்கு. டிம்பர் மரங்களில் சில மரங்கள் 5 வருடத்துல பலன் தரும், சில மரங்கள் 8 வருஷத்துல பலன் தரும், சில மரங்கள் 20 வருஷத்துக்கு பலன் தரும். இதுக்கும்மேல இந்த மரங்கள் தருகிற சுத்தமான காற்றுதான் மிகஅதிகமான பலன். டிம்பர் மரங்களோடு ராசி மற்றும் நட்சத்திர மரங்களும் பண்ணையில இருக்கு. இந்த ஊர்ல மழை பெய்யாத வருஷத்துல கூட லிட்டில் ஊட்டியில் மழை பெய்யும். இதுக்கு காரணம் இந்த மரங்களால் நல்ல குளிர்ச்சி உருவாகி இருக்குறதுதான், அதனால அவ்வப்போது மழை பெய்துகொண்டே இருக்கும்” என்கிறார்.

குறைந்தபட்சமாக ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்து

“ஏறக்குறைய ஒரு லட்சம் மரம் நடவு செய்துள்ளேன். ஒரு மரத்தின் குறைந்தபட்ச மதிப்பு 10,000 ரூபாய் என்றால்கூட இந்த மரங்கள் எல்லாம் 100 கோடி மதிப்பு பெறும். இவற்றில் செம்மரம், சந்தனமரம், ஈட்டிமரம் இவற்றின் மதிப்பு மிக அதிகமாகும்” என பொருளாதார கணக்கையும் கூறுகிறார்.

இவரது பண்ணையில் மொத்த நிலத்தில் 90 சதவீத நிலத்தில் மரங்களையும்ம், 10 சதவிகித நிலத்தில் உபரி வருமானம் தரக்கூடிய வேறு பயிர்களையும் சாகுபடி செய்துள்ளார். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.6 - 10 லட்சம் வருமானம் ஈட்டுகிறார். தென்னை, மா, பலா, சப்போட்டா, எலுமிச்சை, நெல்லி, பாக்கு, கறிப்பலா போன்ற மரவகைகளுடன், மிளகு, கொக்கோ, வாழை, பட்டை, பிரியாணி இலை, காபி போன்ற பணப் பயிர்களையும் சிறிது சாகுபடி செய்துள்ளார். இந்த ஊடுபயிர்களில் கிடைக்கும் வருமானத்தை பணியாட்களின் சம்பளத்திற்கு பயன்படுத்துகிறார். மரங்களில் இருந்து வரும் வருமானம் நிகர லாபமாக உள்ளது.

ஆடு மற்றும் கோழி வளர்ப்பு

பரந்த நிலப்பரப்பும், நன்கு வளர்ந்துள்ள மரங்களும் ஆடு மற்றும் கோழி வளர்ப்பிற்கு உகந்ததாக உள்ளது. “செம்மறி ஆடு புல்லை மட்டுமே மேயும், மரங்கள் நன்கு வளர்ந்து விட்டதால் வெள்ளாடு வளர்ப்பதினால் எந்த பாதிப்புமில்லை. ஆடுகள் இங்குள்ள இலை தழை மற்றும் புல்லை மட்டுமே மேய்ந்து வளர்கின்றன. மேலும் நாட்டுக் கோழி, கினி கோழி, வான்கோழி, கடக்நாத் கோழிகளும் இருக்கு. மர விவசாயம் செய்பவர்கள் கால்நடை வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்பையும் சேர்த்து செய்யும் போது கூடுதல் வருமானம் பெற முடியும்” என வழிகாட்டுகிறார்.

என் பசுமை கனவு நிறைவேறியது

“தொடர் முயற்சிகளால் எனது பசுமை கனவான லிட்டில் ஊட்டி நிறைவேறியுள்ளது. இனிவரும் காலங்களில் இம்மரப்பண்ணையை ஒரு சூழலியல் சுற்றுலா தலமாக மாற்ற நினைக்கிறேன்” என்று விருப்பம் தெரிவித்தவர், அதற்கேற்ப பண்ணை சாலைகளுக்கு புதுமையான வகையில் பெயரிட்டுள்ளார். மேலும் பண்ணையில் தாவரவியல் பூங்கா மற்றும் அருங்காட்சியகம் அமைக்க விரும்புகிறார்.

“பூமியில் உள்ள ஒவ்வொருவரும் பசுமையான மரங்களின் காற்றை சுவாசிக்க வேண்டும், அதற்கு லிட்டில் ஊட்டி மூலம் சிறு பங்களிப்பை செய்தது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது என்றவர், இந்த நோக்கத்தை நிறைவேற்ற இளைய தலைமுறையினர் மரங்கள் நடுவதை ஒரு பழக்கமாக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

சுற்றுச்சூழல் நோக்கதோடும், பொருளாதார நோக்கத்தோடு இவர் உருவாக்கியுள்ள லிட்டில் ஊட்டி மரம் சார்ந்த விவசாயத்திற்கு ஒரு மாதிரி பண்ணையாக உள்ளது. இப்பண்ணையில் புதிய விவசாயிகளுக்காக ஈஷா அவ்வப்போது சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com