தமிழகத்தை விட கேரளாவில் சிறுநீரகத்தை விற்பது எளிது: கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்
கந்துவட்டியை திருப்பிக் கொடுக்க வேறுவழி தெரியாத காரணத்தினால் சிறுநீரகத்தை விற்கும் முடிவிற்கு வந்ததாகவும், தமிழகத்தை விட கேரளாவில் எளிதாக சிறுநீரகத்தை விற்றுவிடலாம் என்பதால் அங்கு சென்றதாகவும் ஈரோட்டைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளி ரவி கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியை சேர்ந்த நெசவுத் தொழிலாளி ரவி. இவர் கடன்தொகையை திருப்பி செலுத்தாததால் ரவியின் சிறுநீரகத்தை விற்க சிலர் முயற்சி செய்வதாக அவரது மனைவி சம்பூரணம் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் நேற்று புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கணவர் ரவியை சிலர் கட்டாயப்படுத்தி அழைத்து சென்றுவிட்டதாகவும், அவரை மீட்டுத் தரும்படியும் வலியுறுத்தியிருந்தார். இதையடுத்து சிறுநீரகத்தை விற்பதற்கு முன் ரவி கேரளாவில் இருந்து மீட்கப்பட்டார்.
இந்நிலையில் சிறுநீரகத்தை விற்க சென்றது குறித்து வேதனை தெரிவித்துள்ள ரவி, வேறுவழி இன்றி அந்த முடிவிற்கு வந்ததாக கூறினார். அதுமட்டுமின்றி தமிழகத்தை விட கேரளாவில் எளிதாக சிறுநீரகத்தை விற்றுவிடலாம் என்பதால் அங்கு சென்றதாகவும் தெரிவித்தார். சிறுநீரகத்தை விற்பதன் மூலம் ரூ.5 லட்சம் கிடைக்கும் என்றும், அதில் ரூ.3 லட்சம் கடனை கொடுத்துவிட்டு மீதமுள்ள ரூ.2 லட்சத்தை வைத்து வாழ்க்கையை தொடரத் திட்டமிட்டதாகவும் கூறினார். இதற்காக 6 மாதங்களுக்கு முன்னரே உடல் பரிசோதனை செய்து விட்டதாகவும், கந்துவட்டியாளர்கள் சிறுநீரகத்தை விற்க நிர்பந்திக்கவில்லை என்றும் அவர் கூறினார்.