தமிழ்நாடு
ஈரோடு: வீடுகளில் கருப்புக் கொடி கட்டி சுதந்திர தினத்தை புறக்கணித்த மக்கள் - காரணம் என்ன?
ஈரோடு அருகே அடிப்படை வசதிகளை செய்து தராத மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக் கொடி கட்டி சுதந்திர தினத்தை புறக்கணித்தனர்.
செய்தியாளர்: ரா.மணிகண்டன்
ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த குட்டைத்தயிர்ப்பாளையம் அருகே குருநாதன் புதூர் அமைந்துள்ளது. இங்கு 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஈரோடு - சத்தி பிரதான சாலையில் அமைந்துள்ள இப்பகுதிக்கு சாலை வசதி முறையாக ஏற்படுத்தி தரவில்லை. இதனால் இப்பகுதிக்கு செல்ல மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வரும் சூழலில், இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்துள்ளனர்.
கடந்த ஒரு ஆண்டுகளாக விரைந்து சாலை பணிகளை முடித்து தருவதாகக் கூறி வரும் நெடுஞ்சாலைத் துறை தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டுகின்றனர். இதனால் மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து வீடுகளில் கருப்புக் கொடி கட்டி சுதந்திர தினத்தை அப்பகுதி மக்கள் புறக்கணித்தனர்.