ஈரோடு | பழுதான அரசுப் பேருந்தை தள்ளிச் சென்ற பயணிகள்! முறையாக பராமரிக்க கோரிக்கை
செய்தியாளர்: ரா.மணிகண்டன்
ஈரோடு மாவட்டம் பவானி போக்குவரத்து கிளையில் இருந்து சூரம்பட்டி வலசு, மணிக்கூண்டு பேருந்து நிலையம் வழியாக பவானி வரை அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்நிலையில், வழக்கம் போல ஐந்தாம் எண் கொண்ட அரசு பேருந்து சூரம்பட்டியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மணிக்கூண்டு வழியாக பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்தது. அப்போது மணிக்கூண்டு பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட முயற்சித்த போது பேருந்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து பழுது ஏற்பட்ட அரசு பேருந்தை ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோர் பொதுமக்கள் உதவியுடன் தள்ளி இயக்க முற்பட்டனர். ஆனால், பேருந்தை இயக்க முடியவில்லை. பின்னர் இதுகுறித்து போக்குவரத்து பணிமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாற்று பேட்டரி உதவியுடன் பேருந்தை எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு பேருந்து ஓட்டுநர் தெரிவித்தார்.
அரசு பேருந்து இயங்காததால் பாதியில் இறக்கிவிடபட்ட பயணிகள் அவதியுற்ற நிலையில், மாற்றுப் பேருந்தில் சென்றனர். அரசு பேருந்துகள் முறையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.