ஈரோடு: ஆன்லைன் வகுப்பு - ஆபத்துக்கு இடையே செல்போன் சிக்னலை தேடி வனத்திற்குள் செல்லும் மாணவர்கள்
செய்தியாளர்: டி.சாம்ராஜ்
தமிழக கர்நாடக எல்லையில் அமைந்துள்ள கேர்மாளம் ஊராட்சியில் 5 குக்கிராமங்கள் உள்ளன. இக்கிராமத்தில் சுமார் 3 மலைவாழ் மக்கள் வசிக்கும் நிலையில், 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ - மாணவியர்கள் ஆரம்ப கல்வி முதல் பிளஸ் 2 வரை பயின்று வருகின்றனர். இது அடர்ந்த காட்டுப்பகுதி என்பதால் இங்கு செல்போன் நெட்வெர்க் வசதி இல்லை. அவசரகால பிரசவம், காய்ச்சல், விபத்து போன்ற நிகழ்வுகளை தெரிவிக்கக் கூட கர்நாடக மாநில நெர்வெர்கை பயன்படுத்தும் நிலை உள்ளது.
இதற்கிடையே அண்மையில் தமிழக அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் கூகுள் கணக்கு தொடங்க வேண்டும், அதன் மூலம் ஆன்வகுப்புகள் நடத்தப்படும் என அறிவுறுத்தியுள்ளது. ஆனால், இங்கு நெட்வெர்க் கிடைப்பதில்லை. மாறாக அடர்ந்த காட்டுப் பகுதியில் யானைகள் நடமாடும் இடத்தில் கர்நாடக டவர் சிக்னல் கிடைப்பதால் அங்கு செல்ல வேண்டியுள்ளது.
கிராமத்தில் இருந்து 2 கிமீ தூரத்தில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு சிக்னல் கிடைக்கும் இடத்துக்கு சென்றுவருவதால் பள்ளி மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். அவர்களின் எதிர்காலம் கருதி அரசு செல்போன் கோபுரம் அமைத்த தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.