ஈரோடு: 'ரூ.5 லட்சம் லோன் வேண்டுமா?'-தொலைபேசி அழைப்பை நம்பி ரூ.73,500 பறிகொடுத்த பெண்

ஈரோடு: 'ரூ.5 லட்சம் லோன் வேண்டுமா?'-தொலைபேசி அழைப்பை நம்பி ரூ.73,500 பறிகொடுத்த பெண்
ஈரோடு: 'ரூ.5 லட்சம் லோன் வேண்டுமா?'-தொலைபேசி அழைப்பை நம்பி ரூ.73,500 பறிகொடுத்த பெண்

ஈரோட்டில் தொலைபேசியில் வந்த மர்ம அழைப்பை நம்பி ரூ.73 ஆயிரம் பணத்தை கொடுத்து குடும்பத்தினர் ஏமாந்துள்ளனர். மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை அடுத்துள்ள அண்ணா புதுகாலனி பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன்- ஆராயி தம்பதியினர். இதே பகுதியில் கூலி தொழில் செய்து வரும் இவர்களது இரண்டாவது மகன் திருமலை என்பவர், +2 முடித்துவிட்டு வாகன ஆயில் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த மாதம் 26-ம் தேதி ஆராயி தொலைபேசிக்கு வந்த மர்ம அழைப்பில் பேசிய பெண், தாங்கள் கோவையில் உள்ள நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். பின்னர், உங்களுக்கு 5 லட்சத்திற்கான லோன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்காக உடனடியாக 5000 ரூபாய் கட்ட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இதனை நம்பிய ஆராயி தனது மகன் திருமலை மூலம் உடனே மர்ம நபரின் வங்கிக் கணக்கிற்கு 5 ஆயிரத்தை அனுப்பி உள்ளார். பின்னர் ஒரு லட்சம் தந்தால் உடனடியாக லோன் வழங்கப்படும் என ஆசை வார்த்தை கூறியதால், ஆராயி தனது சேமிப்பு பணம் மற்றும் கடன் வாங்கி பணத்தைக் கொண்டு இரண்டு தவணையாக 30,000, 38,500 என மொத்தம் 73,500 ரூபாயை வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார்.

பின்னர் இதுகுறித்து நிதி நிறுவனத்தின் தொலைபேசிக்கு அழைத்தால் சரிவர அழைப்பை ஏற்காமல் இருந்துள்ளனர். இதனையடுத்து ஆராயி தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, தனது மகன் திருமலை ஆகியோருடன் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தனர். ஏழை மக்களிடையே ஆசைவார்த்தை கூறிய மோசடியில் ஈடுபடும் கும்பலிடம், குடும்பத்தினர் 73 ஆயிரம் ரூபாயை இழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com