தர்ணா செய்து வேட்புமனுத் தாக்கல் செய்த மதிமுக வேட்பாளர்
ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டு பின்னர் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மதிமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் கணேசமூர்த்தி போட்டியிடுகிறார். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் இவர், இன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். 1 மணியிலிருந்து 1.30 மணிவரை எனக் காவல்துறையினர் வேட்புமனு தாக்கல் செய்ய நேரம் ஒதுக்கி இருந்தனர். இருப்பினும் குறிப்பிட்ட நேரத்தில் அனுமதிக்காததால் கணேசமூர்த்தி காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அத்துடன் மாவட்ட ஆட்சியரின் அறை முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, அவர் போராட்டத்தை கைவிட்டார். பின்னர், தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கதிரவனிடம் கணேசமூர்த்தி தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.