மல்டிபிளக்ஸ் திரையரங்கில் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை: அதிகாரிகள் ஆய்வு
ஈரோட்டில் உள்ள மஹாராஜா மல்டிபிளக்ஸ் திரையரங்கில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, வருமான வரித்துறையினர் ஆய்வில் ஈடுபட்டனர்.
4 திரைகள் கொண்ட இந்த திரையரங்கில் அரசு நிர்ணயத்ததை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து வட்டாட்சியர் தலைமையில் வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது டிக்கெட்டுக்கான விலை அச்சிடப்படாமல் இருந்ததும், 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை கட்டணம் வசூல் செய்ததும் தெரியவந்தது.
ஈரோடு சென்னிமலை சாலையில் மஹாராஜா மல்டிபிளக்ஸ் திரையரங்கம் செயல்பட்டு வருகிறது. 4 திரைகள் கொண்ட இந்த திரையரங்கில் அரசு நிர்ணயம் செய்ததைவிட கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக பொதுமக்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தில் புகார் அளித்து வந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக திரைப்படம் பார்க்க வந்த நபர் ஒருவர் கூடுதல் கட்டணம் வசூல் செய்தது தொடர்பாக சம்மந்தப்பட்ட திரையரங்கில் பதிவு செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரபாகர் உத்தரவின் பேரில் ஈரோடு வட்டாட்சியர் ஜெயக்குமார் தலைமையிலான வருவாய்துறை அதிகாரிகள் மஹாராஜா மல்டிபிளக்ஸ் திரையரங்கில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது திரைப்படம் பார்த்து கொண்டிருந்த பொதுமக்களிடம் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், டிக்கெட்டுக்கான விலை அச்சிடப்படாமல் இருந்ததும், 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை கட்டணம் வசூல் செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வருவாய்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை சமர்பித்துள்ளனர்.