"உயிருக்கு ஆபத்து" என ஆடியோ அனுப்பிய காதல் மனைவி.. மீட்டு தரக்கோரி கணவர் புகார்
உயிருக்கு ஆபத்து என ஆடியோ அனுப்பிய காதல் மனைவியை மீட்டு தரக்கோரி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காதல் கணவர் மனு அளித்தார்.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை சேர்ந்த செல்வன் என்பவரும் பவானி குருப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த இளமதி என்பவரும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரத்தை அறிந்த இளமதியின் பெற்றோர் இருவரும் வேறுவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படும் நிலையில் செல்வன் இளமதி ஆகிய இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர்.
இதனை அறிந்த இளமதியின் பெற்றோர் மற்றும் சிலர் அன்றிரவே இருவரையும் பிரித்து சென்றதாகவும் இதுகுறித்து புகார் அளித்தும் போலீசார் முறையான விசாரணை நடத்தவில்லை என தெரிவித்த செல்வன் இதனால் தற்போது வரை சுமார் ஒன்றரை ஆண்டுகளாக தனது காதல் மனைவி இளமதியுடன் சேர முடியாமல் இருந்து வருவதாகும் வேதனை தெரிவித்தார்.
இந்நிலையில் இளமதி தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தன்னை அழைத்து செல்லவேண்டும் என கணவர் செல்வனுக்கு ஆடியோ அனுப்பியுள்ளார் இதுகுறித்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்த செல்வன் தனது மனைவியை மீட்டு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.