ஈரோடு: நாய்கள் கடித்த ஆடுகளை காவல் நிலையத்திற்கு எடுத்துச்சென்ற விவசாயி; கண்டித்த காவல்துறை
ஈரோடு அருகே விவசாய ஆட்டுப்பட்டியில் புகுந்த நாய்கள் பத்து ஆடுகளை கடித்து கொன்ற நிலையில் மக்களின் கவனத்திற்கு எடுத்துச்செல்ல ஆடுகளை வாகனத்தில் ஏற்றி காவல்நிலையத்திற்கு சென்றவர்களை கண்டித்த காவல்துறையினர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ராமலிங்கபுரத்தில் விவசாயி அர்ஜுனன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்குச் சொந்தமான ஆட்டுப்பட்டில் பத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று காலை வழக்கம் போல ஆட்டுப்பட்டியை திறக்க சென்றபோது பட்டியில் இருந்த ஆடுகளில் பத்து ஆடுகள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனையடுத்து ஆத்திரமடைந்த விவசாயி அர்ஜூனன் இச்சம்பவத்தை மக்கள் கவனத்திற்கு எடுத்துச் செல்ல நினைத்து, உயிரிழந்த ஆடுகளை வாகனத்தில் ஏற்றி சென்னிமலை காவல் நிலையத்திற்கு எடுத்துச்சென்றுள்ளார். இச்சம்பவத்தை அறிந்த சென்னிமலை காவல்துறையினர், விவசாயி அர்ஜூனனின் வாகனத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதனால் விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கு முன்னதாக அதேபகுதியில் நல்லசிவம் என்பவரின் பட்டியில் 22 ஆடுகளை நாய்கள் கடித்து கொன்ற சம்பவத்தை கண்டித்து சாலைமறியல் ஈடுபட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.