ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | நாதக வேட்பாளர் அறிவிப்பு; இருமுனைப்போட்டி உறுதியானதா?
2021 சட்டமன்ற தேர்தலின்போது ஈரோடு கிழக்கு தொகுதியில், திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா வென்றிருந்தார். அடுத்த சில வருடங்களில், உடல்நலக்குறைவால் அவர் உயிரிழந்ததை அடுத்து, இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தையுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் களமிறங்கி வெற்றிபெற்று இரண்டு ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துவந்தார்.
இந்நிலையில் , சமீபத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனும் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததை அடுத்து, மீண்டும் இடைத்தேர்தலை கண்டுள்ளது ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி.
இப்படி நான்கு ஆண்டுகளில் 3 ஆவது முறையாக தேர்தலை சந்திக்கும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்.ஏ. மற்றும் எம்.ஃபில் முடித்து, 13 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி வந்த சீதாலட்சுமி தற்போது கேபிள் டிவி ஆப்ரேட்டர் உதவியாளராக பணியாற்றி வருவதாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் – 2025, வேட்பாளர் அறிவிப்பு.
வருகின்ற 05-02-2025 அன்று, தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக என் அன்புத்தங்கை மா.கி.சீதாலட்சுமி (முதுகலை ஆய்வியல் நிறைஞர் (M.A, M.Phil.,) அவர்கள் போட்டியிடவிருக்கிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று கூறப்பட்டுள்ளது
இருமுனை போட்டியா?
முன்னதாக, ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2 முறையும் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட நிலையில், இம்முறை திமுக நேரடியாக களமிறங்குகிறது. திமுக கொள்கைப் பரப்பு இணைச்செயலாளராக இருக்கும் சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அதேநேரம், அதிமுக, தேமுதிக, தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளும் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தனர்.
இதனால், திமுக நாதக இடையேதான் இருமுனைப்போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.