ஈரோடு கிழக்கில் தொடங்கியது வாக்குப் பதிவு - பதற்றமான வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு

ஈரோடு கிழக்கில் தொடங்கியது வாக்குப் பதிவு - பதற்றமான வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு
ஈரோடு கிழக்கில் தொடங்கியது வாக்குப் பதிவு - பதற்றமான வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் இன்று நடைபெறும் இடைத்தேர்தல் காரணமாக 238 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஈரோடு மாநகராட்சி அலுவலக பாதுகாப்பு அறையிலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வாக்குசாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மொத்தம் ஆயிரத்து 430 மின்னணு இயந்திரங்கள் வாக்குப் பதிவிற்கு பயன்படுத்தப்பட உள்ளன. 286 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 310 விவிபாட் இயயந்திரங்கள் தேர்தலில் பயன்படுத்தப்படவிருக்கின்றன. இதுதவிர கூடுதலாக 20 விழுக்காடு இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது. 32 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணனுன்னி தெரிவித்தார்.

வாக்குப் பதிவு வெப் காஸ்டிங் மூலம் கண்காணிப்பட உள்ளது. உள்ளூர் காவல்துறையும் 5 கம்பெனி துணை ராணுவமும் 2 கம்பெனி ஆயுதப்டை காவலர்களும் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொள்கின்றனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்தன்,நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா உட்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது. முன்னதாக, இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் தேர்தல் அதிகாரிகள் மாதிரி வாக்குப்பதிவை நடத்தினர். இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியுள்ள வாக்குப்பதிவானது மாலை 6 மணிவரை நடைபெறவிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com