ஈரோடு | ”கொன்றுவிடுவோம்” காதல் திருமணம் செய்த தம்பதிக்கு மிரட்டல்; பாதுகாப்பு கேட்டு ஆட்சியரிடம் மனு
செய்தியாளர்: ரா.மணிகண்டன்
ஈரோடு மாவட்டம் மரப்பாலத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (23) முத்தம்பாளையத்தைச் சேர்ந்த சுபஸ்ரீ (20) ஆகியோர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் அறிந்த பெண்ணின் பெற்றோர், மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இருவரும் கடந்த 16ம் தேதி நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.
அப்போது காவலர்கள் முன்னிலையில் சுபஸ்ரீயின் சகோதரி தாக்கியதாகவும் தொடர்ந்து சுபஸ்ரீ காதல் கணவருடன் செல்ல சம்மதம் தெரிவித்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு விக்னேஸ்வரன் வீட்டிற்கு வந்த பெண்ணின் வீட்டார் சுபஸ்ரீயை தங்களுடன் அனுப்புமாறு அடியாட்களுடன் வந்து மிரட்டிச் சென்றதோடு, செல்போன் மூலம் பெண் வீட்டார் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதையடுத்து தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்ட காதல் தம்பதியினர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.