"ஈரோடு கிழக்கு வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்கள்!"- அதிமுக சிவி சண்முகம் வழக்கு

"ஈரோடு கிழக்கு வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்கள்!"- அதிமுக சிவி சண்முகம் வழக்கு
"ஈரோடு கிழக்கு வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்கள்!"- அதிமுக சிவி சண்முகம் வழக்கு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அதிமுக சார்பில், அதன் அமைப்புச் செயலாளர் சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா மரணமடைந்ததை அடுத்து, அத்தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இத்தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், “தொகுதியின் வாக்காளர் பட்டியலை சரிபார்த்தபோது, அதில் இடம்பெற்றிருந்த பலர் தொகுதியில் இல்லை என்பதும், இறந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படவில்லை என்பதும், பல வாக்காளர்களின் பெயர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கையான 2,26,876-ல், 7,947 இறந்தவர்களின் பெயர்கள் உள்ளது. அவை பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை. மேலும் 30,056 வாக்காளர்கள் தொகுதியில் வசிக்கவில்லை. இதைவைத்து அங்கீகாரமில்லாத ஓட்டுகளை போட பயன்படுத்தக் கூடும்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “ஆளுங்கட்சியில் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் ஒருவர், பணபட்டுவாடா பற்றி நிர்வாகிகளிடம் பேசியுள்ளார். 2021ஆம் ஆண்டு தேர்தலில் வாக்கு வித்தியாசம் என்பது 8,500 வாக்குகளாக தான் இருந்தது. ஆனால் தற்போது இறந்தவர்கள், தொகுதியில் இல்லாதவர்கள் என 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பெயர்கள் பட்டியலில் நீடித்து வருகிறது.

இதனால் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தவேண்டும். மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட வாய்ப்பு இருப்பதால், மத்திய படைகளை தேர்தல் பணிக்கு ஈடுபடுத்தகோரி ஏற்கனவே மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுக்களை பரிசீலிக்கவும், தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். பூத் லிப் அடிப்படையில் அல்லாமல், வாக்காளர் அடையாள அட்டை அடிப்படையில் வாக்காளர்களை சரிபார்த்து, வாக்களிக்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும்” என்றும் மனுவில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் நாளை 12ஆவது வழக்காக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com