"ஈரோடு இடைத்தேர்தல் அரசியல் ரீதியாக அதிமுகவுக்கு வெற்றிதான்" - கேபி,முனுசாமி

"ஈரோடு இடைத்தேர்தல் அரசியல் ரீதியாக அதிமுகவுக்கு வெற்றிதான்" - கேபி,முனுசாமி
"ஈரோடு இடைத்தேர்தல் அரசியல் ரீதியாக அதிமுகவுக்கு வெற்றிதான்" - கேபி,முனுசாமி

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு இபிஎஸ் - ஓபிஎஸ் இருவருக்குமிடையே ஏற்பட்ட மோதல் தான் என அண்ணாமலை கூறியிருப்பது அவரின் தனிப்பட்ட கருத்து என அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரியில் அதிமுக-வின் துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.. அப்போது அவர் கூறுகையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு தோல்வி என்றாலும் அரசியல் ரீதியாக அதிமுக வெற்றி பெற்றுள்ளது. ஆளுங்கட்சியினர், 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்களை வைத்து ஈரோடு தொகுதியில் தேர்தல் பரப்புரை செய்து வெற்றி பெற்றார்கள்.

ஆனால், அதிமுகவினர் எந்த சலசலப்பும் இன்றி போட்டியிட்டு இரண்டாம் இடத்தை பிடித்துள்ளோம். எனவே தமிழகத்தின் வலுவான எதிர்க்கட்சி அதிமுக தான் என மீண்டும் நிரூபித்துள்ளோம். அந்த வகையில் அதிமுக-வுக்கு அரசியல் ரீதியாக இந்த தேர்தல் வெற்றி தான். இந்த தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எந்த வேலையும் இல்லை என தெரிவித்த அவர் தொடர்ந்து...

இபிஎஸ் - ஓபிஎஸ் இடையே ஏற்பட்ட சலசலபால் தான் அதிமுக தோல்வி அடைந்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்து. தமிழகத்தின் வலுவான எதிர்க்கட்சி அதிமுக தான் என இந்த தேர்தல் மூலம் நிரூபித்துள்ளோம். அடுத்த தேர்தலில் தங்களின் தலைமையில் தான் கூட்டணி கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவார்கள்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி, திராவிட மாடலுக்கு கிடைத்த வெற்றி என்று ஸ்டாலின் கூறியுள்ளார். ஒரு தொகுதியின் இடைத்தேர்தலுக்கு 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்களை வேலை செய்ய வைத்து பெற்ற வெற்றி திராவிட மாடல் வெற்றியில்லை, ஸ்டாலின் தவறான கண்ணோட்டத்தில் கூறுகிறார். அதேபோல் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக போட்டியிட்டு டெபாசிட் இழந்தது. ஆனால், தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாங்கள் இரண்டாமிடம் பிடித்துள்ளோம் என்றவரிடம்...

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதிபலிக்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்த கே.பி.முனுசாமி, இடைத்தேர்தலில் வெற்றி ஒருபோதும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதிபலிக்காது. இது ஒரு தொகுதியில் நடக்கக்கூடிய தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என்பது தமிழகம் முழுவதும் நடைபெறும். ஆகவே, இந்த தேர்தலின் வெற்றி ஒருபோதும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதிபலிக்காது என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com