ஈரோடு: கட்டடம் கட்ட தோண்டப்பட்ட குழியில் விழுந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு
அம்மாபேட்டை அருகே கட்டடம் கட்ட தோண்டப்பட்ட குழியில் விழுந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூர் சுந்தராம்பாளையம் காலனியைச் சேர்ந்தவர் முருகன் (எ) குருசாமி. இவருக்கு, புஷ்பராஜ் (13), அபினேஷ் (6) என்ற இரு மகன்களும், ஹர்த்திகா (3) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், அபினேஷ் ஊமாரெட்டியூரில் உள்ள அரசுப் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில், வழக்கம்போல் நேற்று பள்ளிக்குச் சென்று திரும்பிய அபினேஷ் அருகில் விளையாட சென்றுள்ளான். இதையடுத்து இரவு 8 மணி ஆகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்துள்ளனர். ஆனால் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து கட்டடம் கட்டுவதற்காக் தோண்டப்பட்ட குழியின் அருகே விளையாடிக் கொண்டிருந்ததாக தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து அங்கு சென்ற பெற்றோர் தேடிப்பார்த்துள்ளனர். அப்போது குழியில் சிறுவன் தண்ணீரில் மூழ்கி இருப்பது தெரியவந்தது. உடனடியாக சிறுவனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அபினேஷ் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த தகவலின் பெயரில் பவானி டிஎஸ்பி அமிர்தவர்ஷினி மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.