ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் ஓடும் ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை
அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பாதையில் பிரசவ வலியுடன் ஆம்புலன்ஸில் சென்ற பெண்ணுக்கு, வாகனத்திலேயே ஆண் குழந்தை பிறந்தது.
அந்தியூரை அடுத்த, பர்கூர் மலை கிராமமான சின்னசெங்குலத்தைச் சேர்ந்தவர் மாதேவன். இவரது மனைவி சித்ரா, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தொலைபேசி மூலம் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஒசூரிலிருந்து வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம் சித்ராவை அழைத்துச் சென்றது.
இந்நிலையில், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பெரிய செங்குலம் அருகே ஆம்புலன்ஸ் சென்றபோது சித்ராவுக்கு பிரசவ வலி அதிகரித்துள்ளது. இதையடுத்து ஆம்புலன்ஸ் வாகனத்தைச் சாலையோரத்தில் நிறுத்தி, அவசரகால மருத்துவப் பணியாளர் சிவா பிரசவம் பார்த்துள்ளார்.
இதில், சுகப்பிரசவத்தில் சித்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதைத் தொடர்ந்து, பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாயும் சேயும் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் நலமாக உள்ளதாக தெரிவித்தனர்.
ஓடும் ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் சிவா மற்றும் ஓட்டுநர் குமரேசன் ஆகியோருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.