நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் ஒரே ஊதியம்- மத்திய அரசு சுற்றறிக்கை
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் தற்காலிக மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு, நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கு இணையான சம்பளம் வழங்கப்படவேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஒரே வேலையை செய்யும் நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஒரே ஊதியம் வழங்க அறிவுறுத்தி அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், தற்காலிக பணியாளர்களுக்கும் நிரந்தர ஊழியருக்கான குறைந்தபட்ச ஊதியம் மற்றும் பஞ்சப்படி வழங்க அறிவுறுதப்பட்டுள்ளது.
மேலும், தொடர்ச்சியாக இருக்கும் பணிகளுக்கு தினசரி ஊதிய அடிப்படையில் ஊழியர்களை நியமிக்கக் கூடாது என அந்த சுற்றிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, ஒரே வேலையை செய்யும் ஒப்பந்த மற்றும் தற்காலிக தொழிலாளர்களுக்கு, நிரந்தர தொழிலாளர்களைவிட குறைவான ஊதியம் வழங்குவது சுரண்டல் மற்றும் அடிமைத்தனம் என கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் 26-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தெரிவித்ததோடு, அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒரே ஊதியம் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பை 5 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பால் ஏற்கெனவே இருக்கும் ஒப்பந்த தொழிலாளர்கள் பலர் வேலையை இழக்கும் வாய்ப்பு இருப்பதாக அச்சம் நிலவுகிறது.