அதிமுகவில் மீண்டும் சேர ரெடியான ஓபிஎஸ்.. ஒரேயடியாய் முடிச்சுவிட்ட இபிஎஸ்!
’’அதிமுகவில் இணைய தயார்’’ என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்த நிலையில், “அவரை அதிமுகவில் சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை” என திட்டவட்டமாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான தயாரிப்பில் அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. ஒருபக்கம் கூட்டணியின் முடிவுகள் அறிவிப்பு, இன்னொரு பக்கம் தேர்தல் அறிக்கைகள் என பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக பாஜக, அதிமுக கூட்டணியில் அமமுக, அன்புமணி ராமதாஸ் தரப்பு பாமக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. அதேநேரத்தில், தேமுதிக, ராமதாஸ் தரப்பு பாமக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த நிலையில், இன்று தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் இணைய தயார் என்றும், தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவுசெய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர், “எதிரும் புதிருமாக இருந்த டிடிவி தினகரனும், எடப்பாடி பழனிசாமியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒன்றிணைந்திருக்கிறார்கள். நாங்களும் இணைய வேண்டும் என்றுதான் சொல்கிறோம். அதிமுகவில் இணைய நான் ரெடி, டிடிவி தினகரனும், அவருடைய அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமியும் ரெடியா” எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இதுதொடர்பாக பதிலளித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, “ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், "ஓபிஎஸ்ஸைக் கட்சியை விட்டு நீக்கும் முடிவு அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது என்பதால் அவரை சேர்க்க முடியாது. கட்சிக்கு துரோகம் இழைத்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கும் முடிவு அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.

