சிறப்பு அம்சங்களுடன் வாகனங்கள் ஏற்பாடு: ஜனவரியில் இ.பி.எஸ், ஓ.பி.எஸ் பிரசாரம் தொடக்கம்!

சிறப்பு அம்சங்களுடன் வாகனங்கள் ஏற்பாடு: ஜனவரியில் இ.பி.எஸ், ஓ.பி.எஸ் பிரசாரம் தொடக்கம்!

சிறப்பு அம்சங்களுடன் வாகனங்கள் ஏற்பாடு: ஜனவரியில் இ.பி.எஸ், ஓ.பி.எஸ் பிரசாரம் தொடக்கம்!
Published on

2021 சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஜனவரி மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் இதுவரை திறந்தவெளியில் அரசியல் கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்படாத நிலையில், இது டிசம்பர் 19-ஆம் தேதி முதல் தளர்த்தப்படுவதாக இன்று அறிவித்ததும் இங்கே கவனிக்கத்தக்கது.

முதல்வர் மற்றும் துணை முதல்வரின் பிரசாரத்திற்காக சேலம், நமக்கல் மற்றும் கோயம்புத்தூரிலிருந்து சிறப்பு அம்சங்களுடன் அமைந்த பிரசார வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று அதிமுக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதிமுகவில் தற்போதுள்ள கூட்டணியே தொடரும் என்றும், மேற்கு மாவட்டங்களில் ஒரு சில கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவரப்படும் என்றும் தலைமை சுட்டிக்காட்டியிருக்கிறது.

மார்ச் மாதத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும், ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் சட்டமன்றத் தேர்தல் திட்டமிடப்படும் என்றும் எதிர்பார்ப்பதாக அதிமுக மூத்த தலைவர்கள் சிலர் தெரிவித்தனர். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திட்டமிட்டதைப் போலவே, தமிழகத்தின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் ஜனவரி மாதம் பிரசாரத்தை தொடங்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அதிமுகவின் வருடாந்திர பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் டிசம்பர் இறுதிக்குள் நடைபெறும், அப்போது கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த உயர்மட்ட குழுக்கள் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த திங்களன்று மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மண்டல பொறுப்பாளர்களுடன் நடந்த சந்திப்பில், சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது பற்றியும், வேட்பாளர் தேர்வு பற்றியும் ஆலோசனை நடந்தது.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அடிமட்ட கட்டமைப்புகள், வாக்குச்சாவடி குழுக்கள், மகளிர் குழுக்கள், இளைஞர் இளம்பெண்கள் பாசறை  மற்றும் கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு பஞ்சாயத்திலும், நகர்ப்புறங்களில் உள்ள வார்டுகளிலும் ஐ.டி பிரிவு குழுக்களை அமைப்பதற்காக வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலமாக டிசம்பர் இறுதிக்குள் அதிமுகவில் முறையான அடிப்படை கட்டமைப்பு நிர்வாகம் உருவாக்கப்படும் என்று தலைவர்கள் தெரிவித்தனர்.

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகைக்கு பின்பு மாநில அரசியலில் ஏதேனும் தாக்கம் உருவாகுமா என்ற கேள்வி எழுந்துள்ள சூழலில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே பி முனுசாமி, “அதிமுகவின் நல்லாட்சி மற்றும் நலத்திட்டங்களுக்கு வாக்காளர்கள் ஆதரவு அளிப்பார்கள். நிச்சயமாக, நாங்கள் மக்களுடன் நிற்பதனால் அவர்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள்” என்று கூறினார். அதிமுகவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை எழுப்ப திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் களமிறங்கியுள்ள நிலையில், அதிமுகவினர் திமுகவுக்கு எதிரான 2ஜி ஊழல் குறித்து பேச திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com