“புகழேந்தி தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்யுங்கள்” - இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் நீதிமன்றத்தில் மனு

“புகழேந்தி தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்யுங்கள்” - இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் நீதிமன்றத்தில் மனு

“புகழேந்தி தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்யுங்கள்” - இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் நீதிமன்றத்தில் மனு
Published on
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அதிமுக-வின் செய்தித் தொடர்பாளராக இருந்த பெங்களூரு புகழேந்தியை, கட்சியிலிருந்து நீக்கி ஜூன் 14ஆம் தேதி ஒருங்கிணைப்பாளர்  ஒ.பன்னீர்ச்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டனர். அதில் கட்சியின் கோட்பாடுகளுக்கும், கட்சி விரோத செயல்பாடுகளுக்கும் அவர் காரணமாக இருந்ததால் நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது.
'இந்தக் காரணம், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை  அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும்' எனக்கோரி புகழேந்தி, சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு ஆகஸ்ட் 24-ம் தேதி நேரில் ஆஜராக  ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு சம்மன் அனுப்ப சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தங்களுக்கு எதிரான இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை கோரியும்,  நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே இன்று மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அதில், அதிமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், நிர்வாகிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஏராளமான  புகார்களின் அடிப்படையிலும், புகழேந்தியை கட்சியில் இருந்து நீக்கியதாகவும், அதற்கு  கட்சி விதிகளின்படி, ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் அதிகாரம் உள்ளதாகவும் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ். குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் உறுப்பினர் ஒருவரை கட்சியில் இருந்து நீக்கிய விவரத்தை கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் தெரிவிக்கும் வகையில் அறிக்கை வெளியிடுவது அவதூறு குற்றமாகாது எனவும், இதை கருத்தில் கொள்ளாமல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி, புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, தங்களுக்கு சம்மன் அனுப்பியது தவறு என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த மனுக்கள், விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com