ஆளுநரை சந்திக்க பழனிசாமி திட்டம்? அதிமுக விவகாரம் குறித்து முறையீடு!
தமிழ்நாடு அரசியல் பரபரப்பில், தவெக அரசைச் சுற்றிய குதிரை பேரம் குற்றச்சாட்டுகள் அதிமுக உள்கட்சி போருக்கு வழிவகுத்துள்ளன. எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணி அணியை குறிவைத்து, 25 எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்ததாக கூறி நடவடிக்கை கோரிய நிலையில், ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து நிலைமையை விளக்க முயல்கிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவான நிலையில், அக்கட்சிக்கு ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் பிற கட்சி உறுப்பினர்களின் ஆதரவை பெற தவெக முயன்றது.
அப்போது அமமுக சார்பில் வென்ற காமராஜிடம் தவெக குதிரை பேரம் நடத்தியதாக அக்கட்சித் தலைவர் டிடிவி தினகரன் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அதே போல சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் தனது அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்த நிலையில், அதில், எஸ்.பி.வேலுமணி தரப்பில் இருந்த 25 அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். இதனால் அதிமுகவிலும் குதிரை பேரம் நடந்திருப்பதாக பழனிசாமி பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.
இந்தசூழலில் அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பு, எஸ்பி வேலுமணி தரப்பு என இரண்டாக பிளவுபட்டுள்ளது வெளிச்சமானது. இதைத்தொடர்ந்து வேலுமணி தரப்பு 25 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரி சபாநாயகரிடம் எடப்பாடி பழனிசாமி மனு அளித்து இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் தான் தற்போது ஆளுநர் அர்லேகரை பார்த்து இதுகுறித்து பழனிசாமி முறையீடு செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவின் உள்கட்சி விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், ஆளுநர் அர்லேகரை அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக ஆளுநரை சந்தித்து எடப்பாடி கே.பழனிசாமி முறையிட திட்டமிட்டுள்ளார்.
ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், கேரளத்திலிருந்து இருந்து நேற்று இரவு தமிழகம் வந்தடைந்தார். இன்று நாள் முழுவதும் மக்கள் மாளிகையில் தங்கியிருக்கும் அவர், இன்று இரவே கேரளத்துக்கு திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.

