“சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த GO போட்டது நான்; ஆனா பாஜகவோடு கூட்டணி வைத்துள்ளது பாமக” - இபிஎஸ்

“சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த GO போட்டது நான். அது இணைய தளத்திலேயே உள்ளது. ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாட்டோம் என்ற கட்சியோடு பாமக கூட்டணி வைத்துள்ளது” என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
EPS
EPSpt desk

செய்தியாளர்: ச.குமரவேல்

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மருத்துவர் பசுபதியை ஆதரித்து கந்தனேரியில் நடைபெற்ற பிரசாரப் பொதுக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

admk symbol
admk symbolfile

அப்போது பேசிய அவர்....

“அதிமுக துரோகம் செய்தது கிடையாது”

“அதிமுக-வால் அடையாளம் காணப்பட்டவர் நம்மை எதிர்த்து இங்கு போட்டியிடுகிறார் (தற்போது பாஜக கூட்டணியில் போட்டியிடும் புதியநீதிக் கட்சித் தலைவர் வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை சுட்டிக்காட்டி). இன்று நம்மை துரோகி என்றும் நாம் அவர் முதுகில் குத்தியதாகவும் பேசுகிறார். என்றைக்கும் அதிமுக துரோகம் செய்தது கிடையாது. ஆகவே நன்றி மறக்க வேண்டாம். 2019ல் நம்மோடு கூட்டணி வைத்திருந்தார் அவர். நமது கழகத்தினர் கடுமையாக உழைத்தும் அவரால் வெற்றிபெற முடியவில்லை. நல்ல எண்ணம் இருந்தால்தான் வெற்றி பெற முடியும். எண்ணம் சரியில்லை. அதனால் தோல்வியடைந்தீர்கள்.

EPS
“தேர்தலில் போட்டியிடும் அளவு என்னிடம் பணம் இல்லை” - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

“பெண்களை தெய்வமாக மதிப்பது அதிமுக”

திமுகவை சேர்ந்த வேலூர் வேட்பாளர் (கதிர் ஆனந்த்) பெண்களை பார்த்து அவதூறாக பேசுகிறார். இன்னொரு அமைச்சர் ஓசி பஸ் என பேசுகிறார். பெண்களை இழிவுபடுத்தி பேசுவது திமுக. பெண்களை தெய்வமாக மதிப்பது அதிமுக. இந்த தேர்தலில் பெண்கள் திமுக-விற்கு சரியான பதிலடி கொடுக்கப் போகின்றனர். பெண்களுக்கான மகளிர் உதவித் தொகையை அனைவருக்கும் கொடுக்கிறோம் என சொல்லிவிட்டு தற்போது 75 லட்சம் பேருக்கு மட்டுமே கொடுக்கிறார்கள். ஆனால், வெளியில் ஒரு கோடி பேருக்கு மேல் கொடுக்கிறோம் என பொய் சொல்கிறார்கள்.

udhayanidhi stalin meets pm modi
udhayanidhi stalin meets pm modipt

“அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மடிக்கணினி திட்டத்தை நிறுத்தியது திமுக அரசு”

உதயநிதி வாய்க்கு வந்தமாதிரி எல்லாம் கீழ்த்தரமாக, அவதூறாக பேசுகிறார். இன்றைக்கு போதைப் பொருள் கூடாரமாக திமுக உள்ளது. கஞ்சா போதைப் பொருள் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. மக்கள் வெறுக்கின்ற ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது. பள்ளி கல்லூரி அருகில் கஞ்சா விற்பனை செய்ததை அரசே ஒப்புக் கொண்டுள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மடிக்கணினி திட்டத்தை நிறுத்தியது திமுக அரசு. அன்று மாணவர் மடியில் மடிக்கணினி விளையாடியது, இன்றைக்கு திமுக ஆட்சியில் போதைப் பொருள் பழக்கத்துக்கு ஆளாகி வருகிறார்கள் மாணவர்கள்.

“மாற்றான்தாய் மனப்பான்மையோடு பார்க்கிறது பாஜக”

தமிழகத்திற்கு மத்திய அரசு புயல், வெள்ள பாதிப்பிற்கு சிறப்பு நிதி கொடுப்பதில்லை. ஆனால் வடமாநிலங்களுக்கு சிறப்பு நிதியை அள்ளிக் கொடுக்கிறார்கள். மாற்றான்தாய் மனப்பான்மையோடு பார்க்கிறார்கள். இதனால்தான் தேசிய கட்சிகளோடு நாம் கூட்டணி வைக்கவில்லை. மத்தியில் கூட்டணி வைத்தால் அவர்கள் கொண்டு வரும் திட்டத்தை ஆதரிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம். அதனால்தான் தனித்து நின்று வென்று தமிழக நலன்களை மீட்டெடுக்க உள்ளோம்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

நாங்க பயந்திருந்தால் கூட்டணியில் இருந்திருப்போம். நாங்க பயப்படவில்லை. அதனாலதான் வெளியே வந்தோம். நீங்கள்தான் இரட்டை வேடம் போட்டு மத்திய அரசிடம் சரணாகதி அடைந்திருக்கின்றீர்கள். எங்களை பார்த்து கள்ளக்கூட்டணி என பேசுகிறீர்கள்... அது உங்கள் பரம்பரை புத்தி. நாங்க விலகினால் நீங்க ஏம்பா பதற்றமடையுறீங்க? சதுரங்க வேட்டை படம் போல் ஆசையை தூண்டி ஏமாற்றி வருகிறார்கள். செருப்பு, பருப்பு என என்ன பேசுவது என தெரியாமல் பேசுகிறார் உதயநிதி.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த GO போட்டது நான். அதை மறந்து பச்சோந்தி போல் பேசுகிறார்கள். எதிர்க்கட்சி கூட்டணியில் இருப்பவர். நாம் போட்ட GO குறித்து ஒரு வார்த்தை கூட பேச மறுக்கிறாகள். பச்சோந்தி போல் கூட்டணி மாறி வருகிறார்கள்” என பேசினார் எடப்பாடி பழனிசாமி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com