’அடிப்படை தேவைக்கே மக்கள் கனவுதான் காணவேண்டும்’ - திமுக அரசை விமர்சித்த EPS..!
தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
திமுக அரசை விமர்சித்த எடப்பாடி..
இதற்கிடையே, இன்று கடலூரில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். இபிஎஸ் பேசுகையில், திமுக ஆட்சியில் கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் அனைத்தும் எல்லா துறைகளிலும் இருக்கிறது. டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 வசூலித்தே, ரூ.5,400 கோடி லஞ்சமாக போயிருக்கிறது. டாஸ்மாக் ஊழல் வெளிவரும்போது, பல பெரிய திமிங்கலங்கள் நிச்சயம் சிக்கப்போகிறார்கள் என்று விமர்சித்தார்.
மேலும், திமுக ஆட்சியில் இன்றைய சூழலில் யாரும் வீடு கட்டவே முடியாது. கனவு வேண்டுமானால் காணலாம். மின்சாரத்தை தொட்டால்தான் ஷாக் அடிக்கும், திமுக ஆட்சியில் மின்கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கிறது. ஒரு யூனிட் ரூ.3 ஆயிரம் விற்ற எம்சாண்ட் ரூ.5,500ஆக விற்பனையாகிறது. அதிமுக ஆட்சியில் ரூ.50க்கு விற்ற சாப்பாட்டு அரிசி இப்போது ரூ. 77க்கு விற்பனையாகிறது. விலை பட்டியலை ஒப்பிட்டு எந்த ஆட்சி சிறந்த ஆட்சி என்பதை மக்களே தேர்வு செய்யுங்கள். விலையை ஒப்பிட்டுப் பாருங்கள். எந்த ஆட்சி சிறந்த ஆட்சி என யோசித்து வாக்களியுங்கள் என்று இபிஎஸ் பேசியுள்ளார்.