குவாரிகள் வேலை நிறுத்தம்: விரைந்து சரிசெய்ய தமிழ்நாடு அரசுக்கு இபிஎஸ் கோரிக்கை!

“இப்படி செய்தால் மாநில அரசின் வரி வருவாயும் அதிகரிக்கும். குவாரி வருமானம் தனி நபர்களுக்குச் செல்லாமல், அரசின் கஜானாவிற்குச் செல்லும்”- எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமிபுதிய தலைமுறை

தமிழ்நாடு முழுவதும் கல்குவாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கனிம வளத்துறையின் கீழ் கொண்டு வரப்பட்ட புதிய நடைமுறைகளைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஜூன் 26-ம் தேதி இப்போராட்டத்தை கல் குவாரி உரிமையாளர்கள் முன்னெடுத்தனர்.

போராட்டம் குறித்து பேசிய தமிழ்நாடு கல் குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சின்னச்சாமி போராட்டத்தை தொடங்கிய போது தெரிவிக்கையில், “தமிழகம் முழுவதும் 2,500 கல் குவாரிகளும் 3,000 கிரஷர்களும் செயல்பட்டு வருகின்றன. எங்களை அச்சுறுத்தும் நோக்கில் சமூக விரோதிகள் சிலர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாயிகள் என்ற போர்வையில் இயங்கி வருகின்றனர்.

தற்போது புதிதாக பல்வேறு விதமான சட்ட திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன. குறிப்பாக குவாரிகளுக்கு கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்படுகிறது. இதனால் சிறிய கல்குவாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே எங்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் 2,500 கல் குவாரிகளும், 3,000 கிரஷர்களும் இயங்காது. அதேபோல இங்கு இயங்கும் லாரிகளும் ஓடாது. எனவே அரசு எங்கள் கோரிக்கையை ஏற்று எங்கள் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் எங்கள் போராட்டத்தைக் கைவிடுவோம்” எனத் தெரிவித்தார்.

இந்தநிலையில் கல்குவாரி உரிமையாளர்களின் போராட்டம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக எந்தவிதமான அரசியல் குறுக்கீடுகளுமின்றி கிரஷர் மற்றும் கல் குவாரிகள் சுதந்திரமாக இயங்கி வந்தன. திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், மற்ற துறைகளைப் போலவே கல் குவாரிகளுக்கும் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி உள்ளது என்றும்; குறிப்பாக கடந்த சில நாட்களாக சுற்றுச் சூழல் துறை அதிகாரிகளும், கனிம வளத் துறை அதிகாரிகளும் கல்குவாரிகளைப் பார்வையிட்டு பல்வேறு புகார்களைக் கூறி, தேவையற்ற முறையில் குவாரிகளை முடக்கி நசுக்க நினைக்கிறது என்றும் குற்றஞ்சாட்டி, கல்குவாரி உரிமையாளர்கள் தங்களது உற்பத்தியை நிறுத்திவிட்டனர்.

இதனால், தமிழகமெங்கும் எம்.சாண்ட் மற்றும் ஜல்லி கற்களின் உற்பத்தி முற்றிலுமாக பாதிக்கப்பட்டு கட்டுமானத் தொழில் முழுமையாக நின்றுவிட்டது. குறிப்பாக, சென்னையில் மெட்ரோ ரயில் பணி மற்றும் அரசு மருத்துவமனைகள் கட்டும் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தச் சூழ்நிலையைச் சரிசெய்ய, பல்வேறு கனிமவள விதிகளின்படி அனைத்து குவாரிகளுக்கும் 30 வருடங்களுக்கு சுற்றுச் சூழல் அனுமதியும், குவாரி அனுமதியும் வழங்க வேண்டும். அம்மிக்கல், ஆட்டுக்கல் போன்றவற்றை தயாரிக்கும் குடிசைத் தொழில்களுக்கான அனுமதியினை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களே வழங்க சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும். இந்த ஆட்சியில், குவாரி லைசென்ஸ் புதுப்பிக்கக் காலதாமதம் ஆகிறது. அது சரிசெய்யப்பட்டு விரைவாக குவாரிகள் புதுப்பிக்கப்பட வேண்டும்.

சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில் குவாரி உரிமையாளர்களிடம் பணம் கோரி மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். டிரான்சிட் பாஸ் மற்றும் ஸ்டாக் யார்டு நடைமுறையை நீக்க வேண்டும். அரசு புறம்போக்கு நிலங்களில் ஏலம் விடும்போது, தற்போதுள்ள நடைமுறைப்படி குவாரிக்கு உண்டான சுற்றுச் சூழல் அனுமதி மற்றும் வரைபட பிளான் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

மாநில அரசு கல் குவாரி மற்றும் எம். சாண்ட் ஆகியவற்றிற்கு நேர்மையாக வரி விதித்தால், அவ்வரியினை செலுத்தி நிம்மதியாக, நேர்மையாக தொழில் செய்ய தாங்கள் தயாராக இருப்பதாக கல் குவாரி உமையாளர்கள் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் மூலம் தெரிய வருகிறது.

இதன்மூலம் மாநில அரசின் வரி வருவாயும் அதிகரிக்கும். குவாரி வருமானம் தனி நபர்களுக்குச் செல்லாமல், அரசின் கஜானாவிற்குச் செல்லும். கட்டுமானப் பொருட்களின் விலையும் நிலையாக இருக்கும். இதனால், வீடு உட்பட அனைத்து கட்டுமானப் பணிகளும் தடையின்றி நடைபெறும். தொழிலாளர்களுக்கு நிரந்தரமாக வேலை வாய்ப்பும் கிடைக்கும்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com