இயற்கை விழப்புணர்வு ஓவியங்கள், மாடித்தோட்டத்தால் அழகுபெற்ற திருவேற்காடு நகராட்சி அலுவலகம்

இயற்கை விழப்புணர்வு ஓவியங்கள், மாடித்தோட்டத்தால் அழகுபெற்ற திருவேற்காடு நகராட்சி அலுவலகம்
இயற்கை விழப்புணர்வு ஓவியங்கள், மாடித்தோட்டத்தால் அழகுபெற்ற திருவேற்காடு நகராட்சி அலுவலகம்

சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்கவும், அதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் மாடித்தோட்டம் அமைத்து விழிப்புணர்வு ஓவியம் வரைந்தும் அசத்தியுள்ளனர் நகராட்சி அலுவலக ஊழியர்கள்.

திருவேற்காடு நகராட்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மரம் வளர்ப்பு மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி நகராட்சி ஆணையர் ரமேஷ் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் மாடித் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக திருவேற்காடு நகராட்சி அலுவலகம், எழில்மிகு அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது.

அலுவலகத்தின் முன்பகுதியில் செயற்கை நீர்வீழ்ச்சி, வரவேற்பறையில் அலங்கார செடி, மர வகைகள் என கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் மரம் கொடி செடிகள் வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல் மாடியில் தோட்டம் அமைத்து தக்காளி, கீரை, வெண்டை, கத்தரி, மிளகாய் போன்ற காய்கறிகள்; உடன் கற்பூரவல்லி, துளசி சிறியாநங்கை, முடக்கத்தான், கீழாநெல்லி, அம்மாபச்சை என பல்வேறு அரிய வகை மூலிகைகளும் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. அதேபோல் சப்போட்டா, கொய்யா, எலுமிச்சை என பழவகை கன்றுகளும் நடப்பட்டுள்ளன. இதற்காக மாடியில் பிரத்தியேகமாக கூடாரம் அமைத்து 80 வகையான மரம், செடி, கொடிகளை நட்டு வைத்து பராமரித்து வருகின்றனர்.

இதேபோல் நகராட்சி வளாகத்தை சுற்றிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும், மின்சார சிக்கனம், தண்ணீர் சேமிப்பு உள்ளிட்டவற்றை வெளிகாட்டும் வகையில் ஓவியங்கள் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து நகராட்சி ஆணையர் ரமேஷ் கூறுகையில், “திருவேற்காடு நகராட்சி கோவில் சுற்றுலாத்தலமாக உள்ளதால் இதனை பசுமையாக மாற்ற பொதுமக்கள் முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தி அதற்கு முன்னுதாரணமாக திருவேற்காடு நகராட்சி அலுவலகம் பசுமையாக மாற்றப்பட்டுள்ளது. பொதுமக்கள் மாடித்தோட்டம் அமைக்க விரும்பினால் நகராட்சி நிர்வாகம் அதற்கு உதவி செய்ய தயாராக உள்ளது” என்றார். மேலும் நகராட்சியில் பிளாஸ்டிக் இல்லா நகரமாக மாற்ற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com